காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் ஹிஜாபி கராத்தே சாம்பியன்!

Share this News:

ஐதராபாத் (04 செப் 2022): ஐதராபாத்தைச் சேர்ந்த சையதா ஃபலாக் என்ற கராத்தே சாம்பியன், எதிர் வரும் செப்டம்பர் 11 ல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெறும் காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் 2022 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார்..

ஃபலாக் தற்போது சுல்தான் உல் உலூம் கல்லூரியில் எல்எல்பி படித்து வருகிறார், அவர் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாத்-உல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் உறுப்பினராகவும் உள்ளார். அவர் இதுவரை 20 தேசிய மற்றும் 22 சர்வதேச சாம்பியன்ஷிப்களை வென்றுள்ளார். ஃபலாக் ஹைதராபாத்தில் “தங்கப் பெண்” என்றும் அழைக்கப்படுகிறார்.

தனது கராத்தே பயணம் குறித்து அவர் தெரிவிக்கையில் “எனது மூத்த சகோதரியால் கராத்தே எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ஆரம்பத்தில் அது தற்காப்பு மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவது பற்றி மட்டுமே இருந்தது.” என்றார்/

ஒரு தொழில்முறை கராத்தே வீராங்கனையாக தனது பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஃபலாக், “நான் அதை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் என்று என் பெற்றோரிடம் சொன்னபோது, ​​அவர்கள் அதைப் பற்றி பயந்தார்கள். இருப்பினும், எனது மூத்த சகோதரி சையதா அய்மன் அவர்களை சமாதானப்படுத்தினார், இது எனது பயணத்தை தொடங்குவதற்கு உதவியது” என்றார்.

கராத்தே வீராங்கனையாக ஃபலாக்கின் பயணம் 2006 ஆம் ஆண்டு பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் தொடங்கியது. “நான் ஜனவரி 2007 இல் இந்திய-இலங்கை சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றேன், அந்த ஆண்டு மே மாதம், நேபாளத்தில் நடந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றேன்,” என்று சாம்பியன் கூறினார்.

ஃபலக் தனது உடற்பயிற்சி முறை மற்றும் உணவு முறை குறித்து கூறுகையில், “நான் வாரத்தில் ஆறு நாட்கள் உடலை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி பயிற்சி செய்கிறேன். என்றார். மேலும் பல்வேறு போட்டிகளுக்கான கட்டமைப்பில் சமச்சீர் உணவைக் கொண்டிருப்பதை அவர் வலியுறுத்தினார்.

மேலும் அவர் தனது பயிற்சியாளர்களான முகமது ஷாபி மற்றும் அல்தாஃப் ஆலம் அவர்களின் ஆதரவிற்கும் ஊக்கத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஹிஜாபுடன் கராத்தே செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஃபலாக், ஒரு விளையாட்டு வீரராக இருப்பதால், ஒருவரின் மத அடையாளத்தை பராமரிப்பது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். எனினும் நான் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு எனது சொந்த விருப்பத்தின் பேரில் துப்பட்டா அணியத் தொடங்கினேன். முதலில் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் பழகினேன். இருப்பினும், பயிற்சியின் போது நான் அதை அணிய மாட்டேன்.

“நான் அல்லாஹ்வின் நேர்வழியை பெற்றதிலிருந்து நான் ஹிஜாப் அணியத் தொடங்கினேன் எனது வாழ்க்கையில் ஹிஜாபை ஒரு தடையாக நான் உணரவில்லை” என்றார்.

தனது எதிர்கால இலக்குகள் குறித்து பேசிய ஃபலாக், தன்னால் முடிந்தவரை கராத்தேவைத் தொடர விரும்புவதாகக் கூறினார். தற்காப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பெண்களுக்கென பிரத்யேகமாக அகாடமியை தொடங்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது அரசியல் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், “தற்போது அரசியலில் முழுமையாக கவனம் செலுத்துவது எனக்கு மிகவும் கடினமாக உள்ளது, இருப்பினும், மக்களின் சவால்களைப் புரிந்துகொள்வதற்கும் சாத்தியமான தீர்வுகளை வழங்குவதற்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.


Share this News:

Leave a Reply