கிரிக்கெட் வீரர்கள் முஹம்மது சிராஜ், பும்ரா மீது இனவெறி சீண்டல்!

Share this News:

சிட்னி (10 ஜன 2020): இந்திய கிரிக்கெட் வீரர்கள் முஹம்மது சிராஜ், பும்ரா மீது கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் இனரீதியாக மேற்கொண்ட சீண்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா (பிசிசிஐ) -ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில், 3வது நாளான நேற்றைய ஆட்டத்தில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய இருவரையும் சிட்னி மைதானத்தில் பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த ரசிகர்கள் இனரீதியாக இழிவுப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய 4வது நாள் ஆட்டத்திலும் இனவெறி சீண்டல் தொடர்ந்தது. சிராஜ் பந்து வீசிய பின்னர் பும்ரா பந்து வீசுவதற்கு முன் வந்தபோது பவுண்டரி கோட்டு பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது கேப்டன் ரஹானே, மற்றும் சக வீரர்கள் இதுகுறித்து நடுவரிடம் முறையிட்டனர். இதனால், போட்டி இடையில் சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டன.

இதன்பின்னர் போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கோஷம் எழுந்த பகுதியில் இருந்த ரசிகர்களை வெளியேறும்படி கேட்டு கொண்டனர். பார்வையாளர்கள் பகுதியில் சில வரிசைகள் காலியாக விடப்பட்டன. இதன்பின்பு போட்டி தொடர்ந்தது.

இதற்கிடையே இந்திய வீரர்களை இனவெறியுடன் வசைபாடிய ரசிகர்களை வீடியோ பதிவுகளின் மூலம் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்திய வீரர்களை வசைபாடியது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply