முதல்வர் ஸ்டாலினிடம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் திடீர் கோரிக்கை!

Share this News:

சென்னை (17 ஜன 2022): சென்ற ஆண்டைப்போல இந்த வருடமும் 12ஆம் வகுப்புத் தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அளிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மாணவர்கள் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளனர்.

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனாவுக்கு தற்போது வரை முடிவு காலம் வரவில்லை.
கொரோனாவைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. கொரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு கல்வி முறையில் பெரும் மாற்றங்கள் நடந்துள்ளன. கடந்த இரண்டு வருடத்தில் பள்ளி நடைபெற்ற நாள்கள் அதிகபட்சம் இரண்டு மாதங்கள்தான் இருக்கும். அதிலும் பெரும்பாலும் சுழற்சிமுறை வகுப்புகள்தான். குறிப்பாக, 2020-21ஆம் கல்வியாண்டில் வகுப்புகள் முழுவதுமாக நடைபெறாததாலும், கொரோனா பாதிப்பு அதிகரித்ததாலும் கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது.

அதேபோல, கடந்த ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இரத்துச் செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டும் 12ஆம் வகுப்புத் தேர்வை இரத்துச் செய்யவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்தமுறை மாணவர்கள் நேரடியாகவே முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கைவைத்துள்ளனர். திருவள்ளூருக்குச் சென்றுவிட்டு முதல்வர் சென்னை திரும்பும்போது சாலையில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவர்கள், ‘ஐயா.. 12ஆம் வகுப்பில் தேர்ச்சி செய்துவிடுங்கள்’ என்று கத்தி கோரிக்கை வைத்தனர். இதனை கேட்ட மு.க.ஸ்டாலினும் சிரித்துக் கொண்டே சென்றார்.


Share this News:

Leave a Reply