இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 2021-ம் ஆண்டு 8.70 லட்சம் பேர் மரணம்!

Share this News:

மதுரை (18 பிப் 2022): வரலாற்றில் இதுவரை இல்லாத அலவிற்கு தமிழகத்தில் 2021-ம் ஆண்டு 8.70 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழக மக்கள் தொகை 6 கோடியே 24 லட்சம் ஆகும். இது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் 7 கோடியே 21 லட்சமாக உயர்ந்தது. 2021-ம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற வில்லை. இருந்தாலும், தமிழக மக்கள் தொகை தற்போது 8 கோடியை தொட்டு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இறப்பு என்பது ஒருபுறம் இருந்தாலும், அதனை விட பிறப்பு அதிகமாக இருப்பதால் தான் மக்கள் தொகை ஆண்டுதோறும் கூடிக்கொண்டே செல்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான இடைவெளி மிக அதிகமாக இருக்கும். ஆனால் வரலாற்றிலேயே முதல் முறையாக 2021-ம் ஆண்டு தான் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையேயான இடைவெளி மிகவும் குறைந்து போய் உள்ளது. பிறப்பு-இறப்பு குறித்து அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு 8 லட்சத்து 73 ஆயிரத்து 361 பேர் பிறந்துள்ளனர். 5 லட்சத்து 49 ஆயிரத்து 259 பேர் இறந்தனர். அதில் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே 59 சதவீதம் இடைவெளி உள்ளது. அதுவே 2021-ம் ஆண்டு 9 லட்சத்து 2 ஆயிரத்து 367 பேர் பிறந்துள்ளனர். 8 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே உள்ள இடைவெளி வெறும் 3.69 சதவீதம்தான்.

அதுமட்டுமல்ல, இதுவரை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு 2021-ம் ஆண்டு இறப்பு எண்ணிக்கையும் மிக அதிகமாக உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு தமிழகத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 49 ஆயிரத்து 259 ஆகும். 2019-ம் ஆண்டு 6 லட்சத்து 37 ஆயிரத்து 564 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை ஒப்பிடுகையில் 2019-ம் ஆண்டு இறப்பு சதவீதம் 16.07 அதிகமாக உள்ளது. 2020-ம் ஆண்டு 6 லட்சத்து 90 ஆயிரத்து 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கையை 2019-ம் ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால் 2020-ம் ஆண்டு இறப்பு சதவீதம் 8.22 அதிகம் ஆகும். 2021-ம் ஆண்டு 8 லட்சத்து 70 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 26.11 சதவீதமும், 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36.48 சதவீதமும், 2018-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 58.43 சதவீதமும் அதிகமாக உள்ளது.

2021-ம் ஆண்டு தமிழகத்தில் இறப்பு அதிகமாக இருக்கும் அதே வேளையில் பிறப்பும் குறைந்து போய் உள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2021-ம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை குறைந்து போய் விட்டது. 2019-ம் ஆண்டு 9 லட்சத்து 45 ஆயிரத்து 122 பேரும், 2020-ம் ஆண்டு 9 லட்சத்து 37 ஆயிரத்து 959 பேரும் பிறந்தனர். ஆனால் 2021-ம் ஆண்டு வெறும் 9 லட்சத்து 2 ஆயிரத்து 367 பேர்தான் பிறந்தனர். இது 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.52 சதவீதமும், 2020-ம் ஆண்டுடன் 3.79 சதவீதமும் குறைவாகும்.


Share this News:

Leave a Reply