ஆவின் விலை மீண்டும் உயர்வு – பால் முகவர்கள் கண்டனம்!

Share this News:

சென்னை (16 டிச 2022): ஆவின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பால் முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு லிட்டருக்கு 3.00ரூபாய் உயர்த்தி வழங்கிய காரணத்தால் கடந்த நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற பாக்கெட்) பால் விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு 12.00ரூபாய் உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தலையில் மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்றி வைத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

இந்த நிலையில் அடுத்த அதிரடியாக, நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக ஆவின் நெய் விற்பனை விலையை லிட்டருக்கு 50.00ரூபாய் உயர்த்துவதாக (ஒரு லிட்டர் 580.00லிருந்து 630.00ரூபாய்) நேற்றைய தினம் (15ம் தேதி) இணையத்தின் விற்பனை பிரிவு அதிகாரிகளுக்கும், ஒன்றியங்களின் பொது மேலாளர்களுக்கும் நிர்வாக இயக்குனர் சுப்பையன் ஐஏஎஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலங்கள் நெருங்கி வருவதாலும், சபரிமலை ஐயப்பன் சாமி பக்தர்களுக்கும் நெய் பயன்பாடு அதிகளவில் தேவைப்படும் சூழலில் ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த வரலாறு காணாத விற்பனை விலை உயர்வை இன்று (16ம் தேதி) முதல் உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு அடுத்த அதிர்ச்சியை மக்கள் தலையில் மிகப்பெரிய நிதிச் சுமையை சுமத்தியுள்ள ஆவின் நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு, திமுக ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில் அதுவும் நடப்பாண்டில் கடந்த 9மாதங்களில் நடைபெறும் மூன்றாவது விலையேற்றமாகும் இது.

குறிப்பாக கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி 515.00ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய் 535.00ரூபாயாகவும், ஜூலை 21ம் தேதி 535.00ரூபாயில் இருந்து 580.00ரூபாயாகவும் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 580.00ரூபாயில் இருந்து 630.00ரூபாய் என கடந்த 9மாதங்களில் மட்டும் ஒரு லிட்டர் நெய்க்கு (20.00+45.00+50.00) 115.00ரூபாய் என இதுவரை ஆவின் வரலாற்றில் இல்லாத வகையில் நெய் விற்பனை விலை உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் விரோத செயலன்றி வேறில்லை என்பதால் மூன்றாவது முறையாக உயர்த்தப்படும் இந்த ஆவின் நெய் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசையும், ஆவின் நிர்வாகத்தையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.

ஏனெனில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாத காலகட்டத்திலேயே நடப்பாண்டில் மார்ச் மாதம் லிட்டருக்கு 20.00ரூபாயும், ஜூலை மாதம் 45.00ரூபாயும் ஆவின் நெய் விற்பனை விலையை உயர்த்திய நிலையில் அடுத்த நான்கு மாத இடைவெளியில் மீண்டும் லிட்டருக்கு 50.00ரூபாய் உயர்த்துவதை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் ஆவினில் நாளொன்றுக்கு சுமார் 39லட்சம் லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது நாளொன்றுக்கு சுமார் 30லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் நடைபெற்று வருகிறது. காரணம் ஆவினின் 27ஒன்றியங்களில் பல ஒன்றியங்களில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான தொகையை குறித்த காலத்தில் பட்டுவாடா செய்யப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு 50நாட்கள் கடந்தும் நிலுவையில் இருப்பதன் காரணமாக ஆவினுக்கு பால் வழங்கிய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு தனியார் பால் நிறுவனங்களுக்கு வழங்கத் தொடங்கியுள்ளனர். இதனை கண்காணித்து சரி செய்ய வேண்டிய பால்வள ஆணையரே ஆவினின் நிர்வாக இயக்குனராக இருக்கின்ற காரணத்தால் அவர் மெத்தனமாக செயல்பட்டதின் விளைவே ஆவினிற்கான பால் வரத்து குறைந்து போனதற்கு மிகப்பிரதான காரணமாகும்.

மேலும் ஆவினுக்கான பால் வரத்து கடுமையாக சரிந்துள்ளதால் பால் பாக்கெட்டுகள் உற்பத்திக்கான சர்ப்ளஸ் கொழுப்பு இல்லாத காரணத்தால் வெண்ணெய் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டு பாலின் கொழுப்புச் சத்து சமன் (Recombined Milk) செய்வதற்கும், நெய் தயாரிப்புக்குமான வெண்ணைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் குஜராத் மாநிலத்தின் அமுல் நிறுவனத்தை ஆவின் நாடிய நிலையில் அவர்களும் கைவிரித்து விட கடைசியில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள டுபாக்கூர் கூட்டுறவு நிறுவனத்தில் ஏற்கனவே 1500டன் வெண்ணெய் மார்க்கெட் விலையை விட கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்து அதில் கிலோவிற்கு 5ரூபாய்க்கும் மேல் ஆதாயம் பார்த்ததாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் அதே டுபாக்கூர் கூட்டுறவு நிறுவனத்தில் மேலும் 860டன் வெண்ணெய் கூடுதல் விலை கொடுத்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் தான் அதனை ஈடுசெய்ய இந்த நெய் விற்பனை விலை உயர்வை நடப்பாண்டில் அதுவும் 9மாதங்களில் மூன்றாவது முறையாக அமுல்படுத்தப்படுகிறதோ..? என்கிற சந்தேகம் எழுகிறது.

எனவே தற்போது நடப்பாண்டில் மூன்றாவது முறையாக அமுலுக்கு கொண்டு வந்துள்ள ஆவின் நெய் விற்பனை விலையை உடனடியாக திரும்ப பெறவும், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த டுபாக்கூர் கூட்டுறவு நிறுவனத்தில் இருந்து ஆவின் நிர்வாகம் செய்துள்ளதாக கூறப்படும் வெண்ணெய் கொள்முதலில் நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படும் முறைகேடுகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்களுக்கு பட்டுவாடா செய்யாமல் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக பட்டுவாடா செய்திடவும் உத்தரவிடுவதோடு, தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் பால் கொள்முதலை அதிகரிக்கவும், அதனை தீவிரமாக கண்காணிக்கவும் பால்வளத்துறை ஆணையராக தனி ஐஏஎஸ் அதிகாரியை நியமனம் செய்வதோடு, ஆவினை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லக் கூடிய வகையில் சுனில்பாலிவால் போன்ற நேரடி ஐஏஎஸ் அதிகாரியை ஆவின் நிர்வாக இயக்குனராக நியமிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இல்லையெனில் ஒரு காலத்தில் மின்சாரத்தால் ஆட்சியை பறிகொடுத்த திமுக அரசு இப்படியே சென்றால் இந்த முறை பால்வளத்துறையால் ஆட்சியை பறிகொடுப்பதை தவிர்க்க முடியாது என்பதை தமிழக முதல்வரின் தனி கவனத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply