தஞ்சை அருகே கோவில் திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி!

Share this News:

தஞ்சை (27 ஏப் 2022): தஞ்சாவூர் அருகே கோவில் தேர் திருவிழாவில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான 94 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. தேர் களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக கொண்டுவரப்பட்டது. தேர் கோவில் அருகே வந்தபோது உயர் மின் அழுத்த கம்பியில் உரசியது.

இதனால், தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்து 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேரை பிடித்திருந்தவர்கள் பலர் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் சிறுவர்கள் ஆவர்.

இந்நிலையில், தேரில் மின்சாரம் பாய்ந்தது எப்படி என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

களிமேடு கிராமத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் திருநாவுக்கரசு கடவுளுக்காக 3 நாள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் நேற்று இரவு 10 மணிக்கு தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊரை சுற்றி வந்து திரும்ப கோவிலுக்கு செல்லும்.

ஊரை சுற்றிவிட்டு கடைசியாக ஒரு வீட்டில் சாமிக்கு பூஜை, தேங்காய் உடைத்துவிட்டு கோவிலுக்கு திரும்பும்போது சாலைக்கு மேல் உயர்மின்சார கம்பி அருகில் இருந்துள்ளது. இந்த ஆண்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளது. புதிய சாலை 2 அடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கத்தின்போது உயர்மின்சார கம்பி சாலைக்கு மேல் வரும் வகையில் இருந்துள்ளது.

அப்போது, தேரை இழுத்தவர்கள் தேரை திருப்பும்போது பின்னால் வந்துகொண்டிருந்த ஜெனரேட்டர் வண்டி சிக்கிக்கொண்டது. இதனால், மீண்டும் தேரை பின்னாள் இழுத்து திருப்ப முடியாமல் சாலை தான் அகலமாக உள்ளதே என்று சாலையின் ஓரம் சென்று தேரை வளைத்து திருப்ப முயற்சித்துள்ளனர்.

அப்படி வளைத்தி தேரை இழுக்கும்போது தேரின் உச்சியில் மடக்கி தூக்கும் வடிவில் அமைக்கப்பட்டிருந்த கும்பம் சாலையின் மேலே சென்றுகொண்டிருந்த உயர்மின் அழுத்த கம்பியில் உரசியது.

இதனால், உயர் மின் அழுத்த கம்பியில் பாய்ந்துகொண்டிருந்த மின்சாரம் இரும்பு அமைப்பால் ஆன தேர் மற்றும் ஜெனரேட்டை கொண்டு வந்த வாகனம் மீது பாய்ந்தது. இதனால், தேரை பிடித்திருந்தவர்கள், ஜெனரேட்டரை இயக்கி வந்த ஆபரேட்டர், பூஜைக்கு தேங்காய் உடைப்பதற்காக தேரில் அமர்ந்திருந்த நபர் உள்ளிட்டோர் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டு பலரது உயிர் பறிபோயுள்ளது.

இந்த தேர் விபத்தில் உயிரிழந்தோர் விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, மோகன் (வயது 22), பிரதாப் (வயது 36), ராகவன் (வயது 24), அன்பழகன் (வயது 60), நாகராஜன் (வயது 60), செல்வம் (வயது 56), சாமிநாதன் (வயது 56), கோவிந்தராஜ், சந்தோஷ் (வயது 15), ராஜ்குமார் (வயது 14), பரணிதரன் (வயது 13) .


Share this News:

Leave a Reply