அதிமுக கூட்டணியிலிருந்து விலக பாஜக முடிவு?

Share this News:

சென்னை (29 ஜன 2022): நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கேட்கும் இடங்கள் கிடைக்காத நிலையில் பாஜக தனித்துப் போட்டியிட ஆலோசித்து வருகிறது.

சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். பிப்ரவரி 5ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். பிப்ரவரி 7ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 4ஆம் தேதி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் உள்ளது. தேமுதிக, பாமக, மநீம, நாதக, அமமுக என பல கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. இதற்கிடையே அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாகவே கூறி வருகிறது.

சென்னை கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக உறுப்பினர்கள் பரபர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை இடங்களை கேட்டுப்பெறுவது என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. அதிமுகவிடம் நாகர்கோவில், சிவகாசி மாநகராட்சிகளை கேட்பது எனவும், அவை கிடைக்காத பட்சத்தில் தனித்துப் போட்டியிடலாம் என ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply