பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக தலைவர் கைது!

Share this News:

சென்னை (26 ஆக 2021): சென்னையில் தாய்க்கும் மக்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜகவை சேர்ந்தவரை ஆந்திர மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை எருக்கஞ்சேரி பகுதியில் வசித்து வந்தவர் பார்த்தசாரதி(55). பா.ஜ.க.வை சேர்ந்த இவர் பெரம்பூர் கிழக்குபகுதி வழக்கறிஞர் பிரிவு தலைவராக இருந்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர், கடந்த 2018ஆம் ஆண்டு தன்னிடம் பார்த்தசாரதி தவறாக நடந்து கொண்டதாக சித்ரா கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பார்த்தசாரதியை கைது செய்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட பார்த்தசாரதி ஜாமீனில் வெளியே வந்தார். அதன்பின்பு அவர் தனக்கு எதிராக புகார் அளித்த பெண்ணுக்கு மேலும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அந்த பெண் தற்போது தனக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். மீண்டும் புகார் ஒன்றை அளித்தார். இதோடு மட்டுமல்லாமல் தனது மகளுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். நாங்கள்‌ வீட்டு வாசலில்‌ இருந்தால்‌ தகாத வார்த்தைகளால்‌ திட்டி, உங்கள்‌ மீது வழக்கு போட்டு உள்ளே தள்ளாமல்‌ விடமாட்டேன்‌ என்று மிரட்டுகிறார். நானும்‌ என்‌ மகள்களும் எங்கள் வீட்டு‌ வாசலில்‌ கோலம்‌ போடும் போதெல்லாம்‌ அவர் வீட்டு ஜன்னலில் இருந்து போட்டோ எடுத்து தொந்தரவு செய்கிறார்.

இது தொடர்பாக என்‌ கணவர்‌ தட்டிகேட்கும் போதெல்லாம் அவரையும் கொலை செய்து விடுவதாக பார்த்தசாரதி மிரட்டுகிறார். எனவே, உடனடியாக பார்த்தசாரதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது மனுவில் அந்த பெண் தெரிவித்திருந்தார்.

பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தன் குடும்பத்துக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அவர் மனு அளித்திருந்தார்.

இது தொடர்பாக பார்த்தசாரதி மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது பார்த்தசாரதி மீதான குற்றசாட்டுஉறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல், ஆபாசமாகத் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த பார்த்தசாரதி போலீசார் கைது விடுவார்கள் என்று பயந்து தப்பி ஓடினார்.

தலைமறைவான பார்த்தசாரதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆந்திரா சென்ற போலீசார் பார்த்தசாரதியை கைது செய்தனர்.


Share this News:

Leave a Reply