கொரோனா பாசிட்டிவ்: வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள நிபந்தனையுடன் மாவட்ட ஆட்சியர் அனுமதி!

374

தஞ்சாவூர் (29 ஜுலை 2020): கொரோனா பாசிட்டிவ் என உறுதியானாலும், அவரவர் வீட்டிலேயே நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது :-

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக வல்லம் மற்றும் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

கொரோனா நோய்த்தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டு, கொரோனா சிகிச்சை மையத்தில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ள தயக்கமுள்ளவர்கள், தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்து தங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.

இதைப் படிச்சீங்களா?:  பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

விருப்பம் தெரிவிக்கும்பட்சத்தில், மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஒப்புதல் பெற்றபின், அவ்வீட்டினை தொடர்புடைய வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து தனிமைப்படுத்திக் கொள்ள தனி கழிவறையுடன் கூடிய தனியறை உள்ளதை உறுதிசெய்து மாவட்ட குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

அதனடிப்படையில் அருகில் வசிப்பவர்களுக்கு ஆட்சேபனை இல்லாதபட்சத்தில், சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். அனுமதி பெறுபவர்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.