பாரசிடமால் மாத்திரை வாங்க மருத்துவர் சீட்டு அவசியமில்லை – தமிழக அரசு தகவல்!

Share this News:

சென்னை (14 ஜூலை 2020): பாரசிடமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு அவசியமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்க வேண்டுமானால் மருத்துவர்களிடம் இருந்து மருந்து சீட்டு வாங்கி இருக்க வேண்டும் என்றும் மருந்து சீட்டு இல்லாதவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படாது எனவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரப்பப்பட்டு வந்தன.

கொரோனா வைரசுக்கு காய்ச்சல், இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. இதனால் சாதாரண காய்ச்சலும் கொரோனாவின் அறிகுறியாகவே கருதும் சூழல் நிலவி வருகிறது.

இந்த விவகாரம் குறித்தும் பாரசிட்டமால் மாத்திரைகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை அரசு உறுதி செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் பாரசிட்டமால் மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வழங்கக்கூடாது என அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்தது.

அரசு தரப்பு அளித்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைப்பதாக அறிவித்தது.


Share this News: