கொரோனாவால் தந்தை மரணம் – மகன்கள் மீது வழக்கு!

Share this News:

சென்னை (08 ஏப் 2020): கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறப்படும் கீழக்கரையைச் சேர்ந்தவரின் இரு மகன்கள் மீது கீழக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த 70 வயது முதியவர், துபாயிலிருந்து சென்னை திரும்பிய நிலையில் கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி திடீரென சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயிரிழந்தார். உடன் அவரது உடல் அவரது மகன்களிடம் ஒப்படைக்கப் பட்டது. உடலை பெற்றுக்கொண்ட அவர்கள் சொந்த ஊரான கீழக்கரைக்கு கொண்டுச் சென்று, அடக்கம் செய்தனர்.

கொரோனா சோதனை முடிவுகள் வரும் முன்பே அந்த முதியவர் உயிரிழந்த நிலையில் கொரோனா இருக்கும் உண்மையை மறைத்ததாக கூறி மகன்கள் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நாங்கள் இந்த விவகாரத்தில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. ஏப்ரல் 2ம் தேதி காலை 7.15 மணியளவில் காய்ச்சல் மற்றும் அசதியாக இருக்கிறது என்று அவர் கூறவே, அருகிலுள்ள மருத்துவமனைக்கு நடந்தே அழைத்துப்போனோம். அங்கு டாக்டர் இல்லாததால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிறிது ஓய்வு எடுத்தால் சரியாகிவிடும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே காலை 11 மணிக்கு ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. சுவாசிக்க அவர் அதிகம் சிரமப்பட்டதால், ஐசியூவில் வைத்திருந்ததாகவும், அங்கு அவர் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவித்தனர். நாங்கள் சென்று பார்க்கும்போது அவர் சாதாரண துணியினால் தான் போர்த்தப்பட்டிருந்தார். இவர் கொரோனா பாதிப்பால் இறந்ததாக மருத்துவமனை நிர்வாகம் எந்த நேரத்திலும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று மூத்த மகன் ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்று பீதி காரணமாக ராமநாதபுரத்தில் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply