வெளிநாட்டு விமானங்களுக்கு சென்னைக்கு பதிலாக திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு!

Share this News:

சென்னை (16 மே 2020): “வந்தே பாரத்” திட்டத்தின் மூலம் தமிழகம் வரும் விமானங்கள், சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளன.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிக அளவில் தமிழகம் வரவிருப்பதால் இனி, சென்னைக்குப் பதிலாக திருச்சி விமான நிலையத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிற நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை, இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக “வந்தே பாரத் மிஷன்” இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

முதல் கட்டமாக 11 விமானங்கள் தமிழ்நாட்டிற்கும், அதில் ஒன்பது விமானங்கள் சென்னைக்கு வந்தடைந்தன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்தம் 1,691 பயணிகள், சென்னை விமான நிலையத்தின் வாயிலாக தமிழகம் வந்து சேர்ந்தனர்.

இதற்கிடையே, இரண்டாம் கட்ட வந்தே பாரத் மிஷன் இயக்கத்தில், சில சர்வேதேச விமானங்களை திருச்சியில் தரையிறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே செல்வதால் இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளதாக கூறப் படுகிறது.

வந்தே பாரத் மூலம் இந்தியா வரும் பயணிகள் அனைவரும் 14 நாட்களுக்கு கட்டாயமாக அமைப்பு ரீதியாகத் தனிமைப் படுத்தப் பட்டிருக்க வேண்டும்.

ஏற்கனவே, சென்னைப் பெருநகரம் கொரோனா தொற்றால் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது. இதனால், அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் தனிமைப்படுத்தும் வசதியை சென்னையில் ஏற்படுத்துவது கடினமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் பொருட்டு, திருச்சியிலும் அதனை சுற்றியுள்ள கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் குறைந்தது 15,000 பயணிகள் தங்கும் தனிமைப்படுத்தும் வசதிகள் ஏற்பாடு செய்யும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.


Share this News: