மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் எடப்பாடியின் கருத்து!

Share this News:

சென்னை (01 பிப் 2020): மத்திய அரசின் பட்ஜெட் எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சரை நான் பாராட்டுகிறேன்.

இந்த நிதி நிலை அறிக்கை உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன்.

இந்த நிதிநிலை அறிக்கையில் நமது நாட்டில் நீர்ப் பற்றாக்குறை அதிகமாக நிலவக்கூடிய 100 மாவட்டங்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதை நான் வரவேற்கின்றேன். நீர்ப் பற்றாக்குறையால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகும் தமிழ்நாட்டிற்கு இத்திட்டத்தின் கீழ், இப்பிரச்சினை நிலவும் அனைத்து மாவட்டங்களும் தேர்வு செய்யப்பட்டு, அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.

அதே போன்று, நீர்ப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு தரிசாக விடப்பட்டுள்ள விளைநிலங்களில் சூரிய மின் உற்பத்தி செய்வதற்கான முயற்சி வரவேற்கத்தக்கது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றச் சம்பவங்களைக் குறைப்பதிலும் நமது நாட்டிற்கே முன்னோடியாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்குகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய காவல் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஒன்றினை தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய ரெயில்வே மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மூலமாக செயலாக்கப்படவிருக்கும் கிசான் ரெயில் மற்றும் கிரிஷி உடான் திட்டங்கள் மூலம் தடையில்லா தேசிய குளிர்பதன முறை நிறுவப்படவிருப்பதை நான் வரவேற்கிறேன்.

நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதை நான் பாராட்டுகிறேன்.

மீன் உற்பத்தி இலக்காக 2022-23 ஆம் ஆண்டிற்கு 200 லட்சம் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும், பால் உற்பத்தி திறனை 2025 ஆம் ஆண்டிற்கு இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதையும் நான் மனதார பாராட்டுகிறேன்.

மத்திய நிதி அமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் ஆதிச்சநல்லூர் உள்பட ஐந்து தொல்லியல் சார்ந்த இடங்களில் அருங்காட்சியகம் கொண்ட மேம்பாட்டு பணிகள் செய்வதாக அறிவித்துள்ளதை தமிழ்நாட்டின் சார்பாகவும், தமிழ்நாட்டின் மக்களின் சார்பாகவும் மத்திய அரசிற்கு நன்றி சொல்லும் அதே வேளையில், கீழடியையும் இந்த திட்டத்தின் கீழ் சேர்க்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.

நமது நாட்டில் மின்னணு சாதனங்கள் மற்றும் திறன்பேசி உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்காக இத்தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது புதிய உற்பத்தி நிறுவனங்கள் தொடங்குவதற்கு வழிவகுக்கும் என நான் நம்புகிறேன். மேலும், தொழில்நுட்ப ஜவுளி வகைகள் உற்பத்தியை தரம் உயர்த்திட 1,480 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறையில் சிறந்து விளங்கும் சென்னை, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தி நிறுவனங்களை சர்வதேசத் தரத்திற்கு இந்த நிதியுதவியால் உயர்த்திட முடியும்.

புதிய தொழில்களில் முதலீடுகள் செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்யவும், தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு ஏற்கெனவே நிறுவன வரியை கடந்த ஆண்டு குறைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச் சலுகை அளிக்கும் வகையிலும், வரி முறையை எளிமையாக்கும் நோக்கத்தோடும் இந்த நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது இப்பிரிவினருக்கு நிவாரணம் அளித்து, பொருள் நுகர்வை உயர்த்தும் என எதிர்பார்க்கிறேன்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய தொழில்நுட்பம் தொடர்பான உற்பத்தி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ஐந்து புதிய திறன் மிகு நகரங்கள் (Smart Cities) உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை நான் வரவேற்கிறேன். இத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு திறன்மிகு நகரம் அமைத்துத் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மத்திய அரசின் தேசிய உட்கட்டமைப்பு திட்டப் பட்டியலில் (National Infrastructure Pipeline) பல்வேறு முக்கிய துறைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சுமார் நூறு லட்சம் கோடி ரூபாய் அளவில் திட்டங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

மேலும், சென்னை-பெங்களூரு விரைவுவழிச் சாலை விரைவில் அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருப்பதற்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் 6,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைப் பகுதிகளை 2024 ஆம் ஆண்டிற்குள் உருவாக்க ஒரு திட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

மேலும் நிதிநிலை அறிக்கையில் புதியதாக நூறு விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நெய்வேலி, ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கவும், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிய நிதி ஒதுக்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்.

கணினி தொடர்பான தொழில்நுட்பம், தகவல் தொடர்பு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக 8000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் quantum தொழில்நுட்பங்களுக்கான தேசிய இயக்கம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில், இந்த நிதிநிலை அறிக்கை திறம்பட தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு மட்டுமன்றி, எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளன. இந்தச் நிதிநிலை அறிக்கையை அளித்திட்ட மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு முதல்வர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Share this News:

Leave a Reply