சிஏஏ ரத்து – முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது சிஏஏ ரத்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார்.

பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் பிரதமரிடம் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தெஇவித்ததாவது:

* கூடுதலான தடுப்பூசியைத் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும்.

* செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலைகளை உடனடியாகச் செயல்பட வைக்கவேண்டும்.

* தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி ஆதாரங்களை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

* ஜி.எஸ்.டி வரி பாக்கி தொகையை முழுமையாகத் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

* நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

* மேகதாது அணைக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.

* முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும்.

*மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக அமைக்க வேண்டும். கோவையிலும் எய்ம்ஸ் அமைக்க முன்னெடுப்பைச் செய்ய வேண்டும்.

* கோதாவரி – காவிரி இணைப்பு, காவிரி – குண்டாறு இணைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

* இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.

* கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்.

* புதிய மின்சாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.

* ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட வேண்டும்.

* மருத்துவக் கல்வியில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பெறப்பட வேண்டும்.

* அறிவிக்கப்பட்ட பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

* புதிய கல்விக் கொள்கை, 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

* நாடு முழுவதும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை உறுதிப்படுத்திட வேண்டும்.

* சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

* கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு சலுகைகள் மத்திய அரசு வழங்கிட வேண்டும்.

*ஈழத்திலிருந்து இந்தியாவில் குடியேறிய இலங்கை அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும்.

* சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும்.

* செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் சீரமைக்கப்பட வேண்டும்.

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

* உலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்பட வேண்டும்.

* இட ஒதுக்கீடு எனப்படும் சமூக நீதி அளவுகோலை மாநிலங்கள் நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

* குடியுரிமைத் திருத்தச் சட்டம் திரும்பப் பெற வேண்டும்.

* பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட வேண்டும்.

* சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

* ரயில்வே திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.

* பல்வேறு நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் மேம்பாட்டு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமரிடம் அளித்துள்ளோம்.

சிலவற்றைத் தலைப்புச் செய்தியாக நேரடியாகச் சொல்லியிருக்கிறோம். சில பிரச்னைகள் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டியவை. சில, ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட வேண்டியவை. சில, மாநில அரசுக்கு அனுமதி அளித்து இயங்க வேண்டியவை.

இந்தக் கோரிக்கைகளை இன்று மட்டுமல்ல தொடர்ந்து ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவோம். அதற்கு இங்குள்ள தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும். நாங்கள் கொடுத்த கோரிக்கைகளை, ‘நிறைவேற்றித் தருவேன் நம்பிக்கையோடு இருங்கள்’ என்று பிரதமர் மோடி கூறினார். அந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

எங்களை ஆளாக்கிய தலைவர் கலைஞர் வழிகாட்டியதன் அடிப்படையில் உறவுக்குக் கைகொடுப்போம், உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்கிற அடிப்படையில் இயங்குவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை – சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடக்கோரியும் பிரதமர் மோடியிடம் அளித்துள்ள மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஹாட் நியூஸ்: