இது நாகலாந்து அல்ல, தமிழ்நாடு – ஆளுநருக்கு எதிராக கொந்தளித்த திமுக!

Share this News:

சென்னை (30 ஜன 2022): இது தமிழ்நாடு, நாகலாந்து அல்ல என்பதை ஆளுநர் உணர வேண்டும் என்று முரசொலி தமிழக ஆளுநருக்கு எதிராக கட்டுரை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிதாக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஆர்.என். ரவி கடந்த 25ம் தேதி குடியரசு தின வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த செய்தியில், “ நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை” என்று தெரிவித்திருந்தார். ஆளுநரின் வாழ்த்துச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் பலரும் ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டு வந்தனர். குறிப்பாக தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆளுநரின் கருத்துகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், 1967ஆம் ஆண்டு முதல் இரு மொழிக்கொள்கையே தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்றும் இரு மொழிக் கொள்கையால் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்வித் தகுதியிலோ அல்லது பெரும் பொறுப்புகளில் அவர்கள் இடம் பெறும் வகையில் பெரும் வாய்ப்புகளிலோ யாதொரு பின்னடைவோ குறைகளோ ஏதுமில்லை எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகம் நாகாலாந்து அல்ல என்பதை தமிழக ஆளுநர் ரவி உணர வேண்டும் என ஆளுநரின் கருத்துக்கு முரசொலி நாளேடு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முரசொலி நாளேட்டில் சிலந்தி கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

அந்தக் கட்டுரையில், “மேதகு ரவி, ஆளுநர் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு, மற்ற இந்திய மாநிலங்களைப் போன்றது அல்ல என்பதை முதலில் உணரவேண்டும்! இந்த மண், அரசியலில் புடம் போடப்பட்ட மண்! இங்கே குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட அரசியல் தெளிவு மிகுந்தவர்கள்.

ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும், தெரிவிக்குமுன் தமிழகத்தைப் புரிந்து கொண்டு – அதன் வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு கூறுவது, அவரது பதவிக்குப் பெருமை சேர்க்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!.

தமிழகத்தைப் பொறுத்தவரை இருமொழிக் கொள்கைதான்; இதிலே ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் மாறுபட்ட கருத்தில்லை. இங்கே ‘பெரியண்ணன்’ மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால், “கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா..” – எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்; அதாவது, இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்!”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply