நியூஸ் 7 தொலைக்காட்சியை புறக்கணிக்க திமுக கூட்டணி கட்சிகள் முடிவு!

Share this News:

சென்னை (19 மே 2020): பா.ஜ.க.வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப் பட்டது.

இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், காங்கிரஸ் தரப்பில் கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நாகராஜன், ஜோதிமணி பற்றி தரக்குறைவான கருத்தை வைத்தார்.

இதற்குக் குறுக்கிட்ட ஜோதிமணி, “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு சரியாக செயல்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினால், அதற்கு தரங்கெட்டத் தனமாக, தனி மனித தாக்குதலில் ஈடுபடும் பாஜகவின் கரு.நாகராஜன் போன்ற மூன்றாம் தர நபர்களை விவாதங்களுக்கு அழைத்தால், என்னைப் போன்றவர்களை விவாதங்களுக்கு அழைக்காதீர்கள்,” என்று தனது கண்டனங்களைத் தெரிவித்து எழுந்து சென்றார். அவருடன் திமுக சார்பில் கலந்து கொண்ட கலாநிதியும் வெளியேறினார்.

இந்நிலையில் கரு. நாகராஜனுக்கு தமிழகமெங்கும் எதிர்ப்பு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இது இப்படியிருக்க நியூஸ் 7 தொலைக்காட்சியை புறக்கணிப்பதாக தமிழக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் ஒப்புதலுடன் விடுக்கப்படும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் செல்வி எஸ்.ஜோதிமணி அவர்களை இழிவுபடுத்துகிற வகையில் பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் பேசியதை அநாகரீகத்தின் உச்சகட்டமாக கருதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News: