திமுக எம்.எல்.ஏ திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்!

204

செங்கல்பட்டு (12 ஜூலை 2020): திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த இதயவர்மனுக்கும், திருப்போரூர் நகரில் செங்கேணி அம்மன் பகுதியில் வசிக்கும் குமாருக்கும் தகராறு இருந்துள்ளது.

குமார் அந்தப் பகுதியில் சுமார் 15 ஏக்கர் சுற்றளவுக்கு பிளாட் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில் குமாரின் பிளாட்டிற்கு செல்ல பொது வழி பாதை சற்று கோணலாக இருந்த காரணத்தினால் குமார் சில அரசியல்வாதிகளை பிடித்து அந்த பாதையை நேர் செய்ய முயன்றுள்ளார்.

பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பொது வழி சாலை போட முயன்றதால் பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தில் பொது வழி சாலை பிரச்சனை தொடர்பாக மனு அளிக்கப்பட்டு அதன் மீது செங்கல்பட்டு கோட்டாட்சியர் நேரில் விசாரணை செய்வதாக தெரிகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் பெய்த மழையில் செங்கணிகோயில் அருகே பொது வழியில் தண்ணீர் தேங்குவதை கண்ட திமுக கட்சியை சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இமயவரம்பனின் ஆட்கள் குமாருக்கு சொந்தமான 15 ஏக்கர் பரப்பளவில் உள்ள ரியல் எஸ்டேட் பகுதியில் பள்ளம் எடுத்து தண்ணீர் வழிய ஏற்பாடு செய்தனர்.

இதைப் படிச்சீங்களா?:  "பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்"-துரைமுருகன் காட்டம்!

தன்னுடைய சொந்த இடத்தில் தகவல் அளிக்காமலேயே பள்ளம் எடுத்த காரணத்தினால் குமார் தரப்பினருக்கும் , இதயவர்மன் தரப்பினருக்கும் சண்டை ஏற்பட்டது . இதில் இதயவர்மனின் தந்தை லக்ஷ்மிபதி , குருநாதன், மனோகரன் ஆகிய மூவருக்கு (கத்தியால்) காயம் ஏற்பட்டது.

அதில் ஆத்திரமுற்ற எம்எல்ஏ இதயவர்மன் குமாரை துப்பாக்கியால் சுடும்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தையூர் கோமா நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசனின் மீது துப்பாக்கி குண்டின் துகள்கள் பாய்ந்துள்ளது எனக் கூறப்பட்டது.

இதில் சீனிவாசன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தை கேள்விப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை செய்துவருகிறார்.இந்த சம்பவம் திருப்போரூர் பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.