திமுக எம்.எல்.ஏவுக்கு திமுக தலைமை நோட்டீஸ்!

Share this News:

சென்னை (05 ஆக 2020): பாஜகவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வரும் திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வத்திற்கு திமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது

சென்னை ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ, கு.க.செல்வம், நேற்று டெல்லியில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுடன் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கு.க.செல்வம், “ராமர் கோயிலுக்குப் பூமி பூஜை நடத்தும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிஃப்ட் வேண்டும் என பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதற்காக டெல்லி வந்தேன்.”

இந்நிலையில் அவர் பாஜகவில் இணைந்ததாக செய்திகள் வெளியாயின, ஆனால். ” நான் பா.ஜ.க.வில் இணையவில்லை. தமிழ்க் கடவுள் முருகனை இழிவு படுத்தியவர்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் தி.மு.க. உட்கட்சித் தேர்தலை மு.க.ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். பாரதத்தில் நல்லதொரு ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைக் குறை சொல்லிக்கொண்டிருக்கும் ராகுல்காந்தியையும், அவர்கள் சார்ந்த தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் அவர்கள், அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து இன்று முதல் (05.08.2020) விடுவிக்கப்படுகிறார்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழகக் கட்டுப்பாட்டை மீறியும் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்தில் இருந்து நீக்கி வைப்பதுடன், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்கக் கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply