அதிமுகவினருக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எச்சரிக்கை

Share this News:

சென்னை (15 ஆக 2020): கட்சி நிர்வாகிகள் யாரும் தனியாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று அதிமுக தலைமை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்த இனிய நாள் நம் முன்னோர்களின் தியாகத்தாலும், உழைப்பாலும், தன்னலமற்ற தொண்டினாலும் மலர்ந்த பொன்னாளாகும்.

நாம் அனைவரும் ஒருதாய் மக்கள். “எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு, நாம் எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு’’ என்ற ஜனநாயகக் கொள்கையை நமக்கு வழங்கிய நாள் இந்த நாள்.

நம் நாடு பெற்ற சுதந்திரமும், அரசியல் சாசனம் தந்த மக்களாட்சித் தத்துவமும் ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் உயர்வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தின் பிடியிலோ, ஒரு குறிப்பிட்ட குழுவின் கைகளிலோ, வலிமை பெற்றவர்களின் கரங்களிலோ இந்த மக்களாட்சி முடங்கிவிடக் கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கம் நமது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கம்.

எம்.ஜி.ஆர். தமிழ் மக்கள் மீது கொண்ட பேரன்பினாலும், தமிழக மக்கள் எம்.ஜி.ஆர். மீது கொண்ட பாசத்தினாலும், நம்பிக்கையினாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவானது. ஜெயலலிதா 35 ஆண்டுகள் தனது உழைப்பையும், அறிவையும் இந்த இயக்கத்திற்காக வழங்கி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒப்பற்ற அரசியல் இயக்கமாக வளர்த்ததோடு, நம்மையெல்லாம் ஆளாக்கி, நம் கைகளில் தமிழ் நாடு அரசின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றிருக்கிறார்கள்.

என்னுடைய காலத்திற்குப் பிறகும் நூறு ஆண்டுகள் கழகம் ஆட்சியில் அமர்ந்து ஏழை, எளிய மக்களுக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும், மகளிருக்காகவும் உழைத்துக்கொண்டே இருக்கும் என்று தமிழ் நாடு சட்டப் பேரவையில் ஜெயலலிதா சூளுரைத்தார்கள்.

இத்தனை பாரம்பரியம் மிக்க நம்முடைய இயக்கம் கழகத்தின் உறுப்பினர்களாகிய உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பாலும் உயர்ந்து கொண்டு வருகிறது.எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது கனவுகளை நனவாக்க, கழகத்தின் லட்சியங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க தமிழ் நாடு அரசு இன்று மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதை அனைவரும் வியந்து பாராட்டுகின்றனர். நாம் தமிழக மக்களுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அதை நோக்கிய பயணத்தில் நாம் அனைவரும் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நேரமிது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், கழக ஆட்சியையும், எப்படி மாற்றாரும் பாராட்டும் வண்ணம் வழிநடத்தினோமோ அதைப் போலவே, இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியைப் பெற நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது.

கடந்த சில நாட்களாக கழக நிர்வாகிகளில் சிலர் எந்தப் பின்னணியும் இன்றி கூறிய சில கருத்துகள் மாற்றாருக்கு பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டன. அத்தகைய நிலை மீண்டும் ஏற்பட்டுவிடா வண்ணம் ஜெயலலிதா காலத்தில் இருந்ததைப் போன்று ராணுவ கட்டுப்பாட்டுடன் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

கட்சியின் அனைத்து முக்கிய கொள்கை முடிவுகளையும், கூட்டணி குறித்த நிலைப்பாடுகளையும், ஜெயலலிதா காட்டிய வழியில் ஜனநாயக ரீதியில் கழகத்தின் தலைமை விரிவாக ஆலோசித்து, கழகத் தொண்டர்களின் மன உணர்வுகளை எதிரொலிக்கும் வகையில் சிறப்பான முடிவுகளை மேற்கொள்ளும்.

எனவே, சிறு சலசலப்புகளுக்கும் இடம் தராமல் நம்மை வீழ்த்த நினைப்போரின் பேராசைகளுக்கு வாய்ப்பளிக்காமல், ஒன்றுபட்டு உழைத்திட உங்களையெல்லாம் அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழக உடன்பிறப்புகள் மக்கள் பணிகளிலும், கழகப் பணிகளிலும் மட்டுமே கவனம் செலுத்துங்கள். கழகத்தை வெற்றிச் சிகரத்திற்கு இட்டுச்செல்ல உங்கள் பணிகள் மிகவும் இன்றியமையாதவை.

அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும், எந்தவித முன்யோசனையும் இன்றி, கழகத் தலைமையின் ஒப்புதல் இல்லாமல், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட இன்னபிற ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கருத்துப் பரிமாற்றங்களை செய்வதன்மூலம் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை. எனவே, ஊடக விவாதங்களில் கழக அரசின் சாதனைகளைப் பற்றியும், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக, கழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள். மக்கள் என்றைக்கும், எம்.ஜி.ஆர். மீதும், ஜெயலலிதா மீதும் பேரன்பு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

அந்த அன்பினை நாமும் பெற்றிருக்கிறோம் என்பதே திண்ணம். நாளை நமதே ! வெற்றி நமதே !” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply