காதர் மொய்தீன் மீது பொய்யான பரப்புரை – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம்!

Share this News:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் குறித்து பொய்யான பரப்புரை வந்துள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகநூல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி-யின் தேசிய தலைவர் K.M.காதர் முகைதீன் அவர்கள் ஜி-20 மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

அதை அறிந்த சில நபர்கள் தவறான செய்தியை சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விளக்கம் அளித்துள்ளது.

சரியான செய்தி பின்வருமாறு..

கும்பகோணத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி:

கும்பகோணம், டிச. 16- கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முகமது சுல்தான் தலைமையில் 15-12-2022 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், மாநில துணைச்செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கலந்துகொண்டு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தி சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி அதன் பவள விழாவை மிகப் பெரிய மாநாடாக சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ளும் வகையில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிறைவுப் பேருரை ஆற்ற இசைவு தெரிவித்திருக் கிறார்கள் என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகிறேன்.

தமிழகத்தில் திராவிட மாடல் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. மக்களின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப விரைந்து செயல்படும் நல்லரசாக இது திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நல்லாட்சி நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சர் பொறுப்பிற்கு வந்திருக்கிறார். அவர் புதிதாக சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் இந்த நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் அவர்கள் ஐந்தாவது முறை முதலமைச்சராக இருந்தபோதுதான் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால் உதயநிதி அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளிலேயே கிடைத்திருப்பது சிறப்பிற் குரியது. எல்லா மக்களோடும் இணக்கமாகப் பழகக் கூடியவர். விரைந்து செயல்படும் செயல்வீரர். நல்ல கல்வி அறிவும், பண்பும், பழக்கவழக்கமும் கொண்ட அவர் தமிழக அமைச்சர் பொறுப்பை ஏற்றிருப்பது மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கிறது. குறிப்பாக முஸ்லிம் சமுதாய மக்களோடு மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளவர் என்ற வகையில், சமுதாய மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. அவரது அரசியல் எதிர்காலம் ஒளிமயமாக அமைந்து, அதன் பலன் மாநில மக்கள் அனைவருக்கும் கிடைத்திட நாங்கள் எல்லோரும் விரும்புகிறோம்; அதற்காகப் பிரார்த்திக்கிறோம்.

ஜி 20 மாநாட்டிற்குத் தலைமை தாங்கும் பொறுப்பு இப்பொழுது இந்திய அரசுக்குக் கிடைத்திருக்கிறது. இதற்காக டெல்லியில் நடைபெற்ற – நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அழைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நானும் சென்றிருந்தேன். பல்வேறு கருத்துகள் அங்கு பகிரப்பட்டன. இந்தியாவின் பெருமையை, மகத்துவத்தை, அதன் வரலாற்றுச் சிறப்பை, கலாச்சாரத் தனித்தன்மையை விளக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு சார்பில் விழாக்கள் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த விழாக்களில் இந்தியாவின் அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த மக்களும் பங்கேற்பதோடு,
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளின் உயரதிகாரிகள், அரசியல் வல்லுநர்கள். வெளிநாட்டு தூதர்கள் எல்லாம் அங்கே கலந்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. இது இந்தியாவுக்குக் கிடைத்த தனிப் பெருமை. இந்தச் சிறப்பு இந்தியாவிற்கு உலக அளவில் சிறந்த தரத்தைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த நம்பிக்கையை – டெல்லியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக எங்கள் கருத்தாக நாங்கள் எடுத்துரைத்திருக்கிறோம். மொத்தத்தில் ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது இந்திய நாட்டுக்கு ஒரு பெரிய சிறப்பைத் தரும்.

கேள்வி: 2024ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு எப்படி இருக்கும்?

பதில்: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சமூக நீதியை ஏற்றுக்கொண்ட, மதவாதத்தைப் புறந்தள்ளக் கூடிய, முற்போக்குச் சிந்தனை கொண்ட கட்சிகள் அனைத்தும் ஓரணியில் ஒன்று சேர வேண்டும் என்பது எங்களது பெரும் விருப்பமாக இருக்கிறது.

நேற்று கூட பாராளுமன்ற நிகழ்வுகளை நாம் கவனித்தபோது, அனைத்து அரசியல் கட்சிகளும் சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக ஓரணியில் ஒன்றுதிரண்டதைக் காண முடிந்தது. அதைப் பார்க்கும்போது, 2024ஆம் ஆண்டு தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் ஒன்று சேர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது; அதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு இருக்கிறது என்றே நாங்கள் பார்க்கிறோம்.
கேள்வி: அப்படியானால், பாரதப் பிரதமர் மோடி தெளிவான நடவடிக்கை களைத்தான் மேற்கொண்டு வருகிறார்… சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கை களுக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பதால், அவர் ஒரு சிறந்த பிரதமர் என்ற கருத்தில் உடன்படுகிறீர்களா?
பதில்: இல்லையில்லை. அதாவது, நம் நாட்டிற்கு கிடைத்துள்ள பிரதமர்கள் சிறந்த தலைவராகத்தான் இருக்க முடியும். சிறந்த தலைவர்களே நாட்டின் பிரதமராக முடியும்? அவரது கொள்கைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கும். அவற்றை எதிர்க்கட்சிகள் விமர்சிப்பது என்பது இயற்கையானது தானே?
ஆக, இந்தியாவின் பெருமை ஜி 20 மாநாடு மூலமாக உலக நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் பிரதமராக இருப்பவர் மோடி அவர்கள்தான். எனவே, நம் நாட்டுக்குக் கிடைத்த பெருமை அவரது காலத்திலும் வந்துள்ளது.

கேள்வி: அப்படி என்றால் மோடி அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிறந்த பாரத பிரதமர் என்று ஏற்றுக் கொள்கிறதா?

பதில்: இல்லைங்க… இந்த நாட்டில் எதிர்க்கட்சிகளாக இருக்கிறோம் என்பது வேறு. இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி என்று ஏற்றுக் கொண்டுதானே இந்திய மக்கள் இருக்கிறோம்? இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் இந்திய மக்களில் சேர்ந்ததுதானே? இந்தியப் பிரதமரை ஏற்காமல் எப்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனியாக இயங்க முடியும்?

ஆக, அவர் இந்தியப் பிரதமர் என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
கேள்வி: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி செயல்படப் போகிறீர்கள்?
பதில்: எங்கள் கட்சியின் அகில இந்திய கமிட்டி கூட்டம் விரைவில் சென்னையில் நடக்கப் போகிறது. அதில் இவை குறித்தெல்லாம் கலந்தாலோசித்து நல்ல முடிவை எடுப்போம். மார்ச் 10ஆம் நாளன்று நடைபெறும் மாநாட்டின் போதுதான் நாங்கள் என்ன முடிவில் இருக்கிறோம் என்பதை அறிவிப்போம்.

கேள்வி: நீங்கள் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பீர்களா?

பதில்: 1989ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாங்கள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி னோம். அதற்கு க்ஷடிஅயெல னநஉடயசயவiடிn – பாம்பே பிரகடனம் என்று பெயர். அந்தப் பிரகடனத்தில் இரண்டு விஷயங்களை நாங்கள் சொன்னோம்.

இந்தியாவின் அனைத்து வணக்கத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும்; பாபரி மஸ்ஜித் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால் அது நீதிமன்றத் தீர்ப்பிற்கு விடப்பட வேண்டும் என்று நாங்கள் சொன்னோம். அதுபோல, பாரதீய ஜனதா கட்சியுடன் நாங்கள் அரசியல் உடன்பாடு வைப்பதில்லை; அப்படி அவர்களுடன் அரசியல் உடன்பாடு வைப்பவர்களோடும் நாங்கள் உடன்பாடு வைப்பதில்லை என்றுதான் தீர்மானம் இயற்றினோம். அந்தத் தீர்மானத்தை இன்னும் நாங்கள் மாற்றவில்லை.
கேள்வி: அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகும் இந்தியப் பிரதமராக மோடி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: அது நாட்டு மக்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அரசியலில் ஜோதிடம், ஜாதகம் எல்லாம் எங்களுக்கு சொல்லத் தெரியாது. இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சி வாங்கியிருக்கிற வாக்கு என்பது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே. இரண்டு பங்கு அவர்களுக்கு எதிரான வாக்குகளே. அதாவது 67 சதவிகித வாக்குகள் அவர்களுக்கு எதிராகப் பதிவானவைதான். 33 சதவிகித வாக்குகளை மட்டுமே அவர்கள் பெற்று, ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆக, இந்த 67 சதவிகித மக்களும் ஓரணியில் அவர்களுக்கு எதிராகத் திரண்டுவிட்டால், அவர்களால் எப்படி மீண்டும் ஆட்சிக்கு வர முடியும்?

கேள்வி: உதயநிதி அவர்கள் தமிழக அமைச்சரானதை ஒட்டி கருத்து தெரிவித்திருக்கிற அதிமுக முன்னாள் அமைச்சர் – தமிழக அரசின் சார்பில் மக்களுக்கு எதுவுமே செய்யப்படாத நிலையில், இவர் அமைச்சராவதால் மட்டும் மாநிலத்தில் பாலாறும், தேனாறும் ஓடப் போகிறதா என்று கேட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: எதிர்க்கட்சியினர் என்று வந்துவிட்டாலே விமர்சனம் செய்வதைத் தவிர வேறு என்ன அவர்களால் செய்து விட முடியும்? வாழ்த்திப் பேச மாட்டார்கள்; விமர்சனம்தான் செய்வார்கள். வசைமாரி பொழிபவர்கள் எப்படி வாழ்த்து மழை பொழிவார்கள்?

கேள்வி: நடைபெற விருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: அப்படியோர் அணி அமைய வாய்ப்பில்லை என்பதைத்தான் நேற்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் எடுத்து காண்பிக்கின்றன. 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் சேர்வதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது

இவ்வாறு கே.எம்.கே. பேட்டி அளித்தார்.


Share this News:

Leave a Reply