மதுரையிலும் பொதுமுடக்கம் – தமிழக அரசு அறிவிப்பு!

Share this News:

மதுரை (22 ஜூன் 2020): மதுரையில் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 30 தேதி வரையில் முழு பொது முடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், பரவை டவுண் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஜூன் 23 நள்ளிரவு முதல் ஜூன் 30 வரையில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவ குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும்.

மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகள், பரவை டவுண் பஞ்சாயத்திற்கு உட்பட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. சராசரியை விட அதிகமான நெருக்கடியில் மக்கள் இங்கு வசிப்பது கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம்.

மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இங்கெல்லாம் முழு ஊரடங்கு ஏற்படுத்த வேண்டும் என்றும், கொரோனா பாதிப்பு அறிகுறி உடையவர்களை முன்கூட்டியே அடையாளம் காண வேண்டும் என்றும் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் 7 நாட்களுக்கு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும். இந்த கால கட்டத்தில் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு தடையில்லை.

அவசரம் மற்றும் மருத்துவ பணிகளை தவிர்த்து மற்ற பணிகளுக்கு ஆட்டோ, டாக்சி, தனியார் வாகனங்கள் இயங்க அனுமதியில்லை

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. .


Share this News: