அராஜக செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!

Share this News:

சென்னை (25 ஜன 2020): தந்தை பெரியார் சிலை உடைக்கப் பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கத்தில் தந்தை பெரியாரின் சிலையைக் கயவர்கள் சிலர் உடைத்துள்ளனர். இந்த சிலை உடைப்பு சம்பவத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

தந்தை பெரியார் தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க அரும்பாடுபட்டவர். தமிழகத்தில் சமூகநீதி போராட்டத்தின் தலைவர் தந்தை பெரியார் தான். அவரின் முயற்சியால் தான் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மக்கள் அரசுப் பணி மற்றும் அதிகாரங்களில் தங்களின் பங்களிப்பை பெற்று வருகின்றனர்.

அதேபோல் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து தரப்பு மக்களும் உரிய பிரதிநிதித்துவம் பெறுவதற்குப் பெரியார்தான் பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றார்.

இன்று தந்தை பெரியாரின் சிலையை நாசப்படுத்தியவர்கள் சமூகநீதிக்கு எதிரான சிந்தனை உடையவர்கள் ஆவர்கள். அவர்களால் மட்டுமே இதுபோன்ற அராஜக செயல்களில் ஈடுபட முடியும்.

தந்தை பெரியாரின் சிலையை உடைத்த கயவர்களை உடனே கண்டுபிடித்து அவர்களுக்கு சட்டரீதியான கடும் தண்டனை வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply