பாஜகவின் ஆபாச அணுகுமுறை எதிரொலி – கரூர் எம்பி ஜோதிமணி அதிரடி முடிவு!

Share this News:

சென்னை (19 மே 2020): தொலைக்காட்சி விவாதத்தில் பாஜக கரு நாகராஜன் தரக்குறைவாக நடந்து கொண்டதன் விளைவாக பாஜக கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என கரூர் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் நாட்டில் போடப்பட்டுள்ள முழு முடக்க உத்தரவால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் படும் இன்னல்கள் பற்றி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று விவாதம் நடத்தப் பட்டது.

இதில் திமுக தரப்பில் கலாநிதி வீராசாமி, பாஜக தரப்பில் கரு.நாகராஜன், காங்கிரஸ் தரப்பில் கரூர் எம்பி ஜோதிமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது நாகராஜன், ஜோதிமணி பற்றி தரக்குறைவான கருத்தை வைத்தார்.

இதற்குக் குறுக்கிட்ட ஜோதிமணி, “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் ஆளும் பாஜக அரசு சரியாக செயல்படவில்லை என்பதைச் சுட்டிக் காட்டினால், அதற்கு தரங்கெட்டத் தனமாக, தனி மனித தாக்குதலில் ஈடுபடும் பாஜகவின் கரு.நாகராஜன் போன்ற மூன்றாம் தர நபர்களை விவாதங்களுக்கு அழைத்தால், என்னைப் போன்றவர்களை விவாதங்களுக்கு அழைக்காதீர்கள்,” என்று தனது கண்டனங்களைத் தெரிவித்து எழுந்து சென்றார். அவருடன் திமுக சார்பில் கலந்து கொண்ட கலாநிதியும் வெளியேறினார்.

மேலும் “பெண் என்றாலே ஆபாசமாக அணுகுவது பாஜகவினரின் வழக்கம். ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது.

நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜகவினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை” என்று எம்பி ஜோதிமணி ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே கரு நாகராஜனின் அணுகுமுறைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.


Share this News: