முதல்வர் ஸ்டாலினுக்கு : தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் திறந்த மடல்!

Share this News:

சென்னை (29 நவ 2022): தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ். ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திறந்த மடல் எழுதியுள்ளர். அதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நோக்கி இதுதான் தார்மீகமா? பண்பாடா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கே.எஸ். ராதாகிருஷ்ணன் குறையொன்றும் இல்லை என்ற தலைப்பில் தொடராக திறந்த மடல் கட்டுரை எழுதி வருகிறார். அதில், அவர் கூறியிருப்பதாவது: “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு…

இறுதியாக சொல்ல வேண்டிய சில விடயங்கள்…

வைகோ போன்றவர்களால் என்னுடைய அரசியல் பயணத்தில் தடை ஏற்பட்டது என பலருக்கு தெரியும். அதை பிழையாக சொல்லவில்லை..

2001 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் கூட்டணி வேண்டும் என்றும் 21 சீட்டுக்களை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் ஏற்பட்ட பின்; கூட்டணி வேண்டாம் என கூறிய வைகோவிடம் போராடி.. அது முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேறினேன்.

பின் 2015-ல் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளை… தலைவர் கலைஞரிடம் வைகோவை 9 ஆண்டுகளுக்குப் பிறகு எனது செல் பேசியில் பேச வைத்து, அன்றே மாலை உங்களின் இல்லத்தில் தங்களை சந்தித்து இந்த விபரத்தை கூறினேன். கலைஞர் என்னை பணித்ததை அடுத்து… உங்களை அழைத்துக் கொண்டு உங்கள் தம்பி தமிழரசுவின் புதல்வர் திருமண அழைப்பிதழ் வழங்க வைகோ வீட்டுக்கு அடியேன் அழைத்துச் சென்றது தங்களுக்குத் தெரியும்.

இருதரப்புக்கும் இணக்கமான சூழல் தோன்றியது. ஆறேழு மாதம் நம்பிக்கையோடு வைகோ இருக்கிறார் என்று நினைத்த வேளையில், 2016 சட்டமன்றத் தேர்தலில் திடீரென மக்கள் நலக் கூட்டணி என தனி அணி 2015 இறுதியில் அமைத்து விட்டார் வைகோ.

இந்த இரண்டு நிகழ்வுகளும் – 2001 மற்றும் 2016 ஆண்டுகளில் வைகோவின் அரசியல் போக்குகளும் – எனக்கு பின்னடைவுதான்.

இன்றைக்கு ஒரு நாளைக்கு நூறு முறை தி.மு.க தளபதி என சொல்லிக்கொண்டு இருக்கும் வைகோ அவர்களுக்கு அன்றைக்கு ஏன் இந்த மனப்போக்கு ஏற்படவில்லை..

அவருடைய திடீர் முடிவால் அன்று என் போன்ற பலருக்கும் எவ்வளவு சிரமங்கள்.. நீங்களும் அவரை ஏற்றுக் கொண்டீர்கள்..இதற்கான காரணங்கள் இன்று வரை தெரியல…

20 ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நான் அரசியல் களத்தில் வலம் வந்தவன். பின் காலத்தில் பணியே செய்ய முடியாமல் தடுத்த சிலரும் உண்டு.. கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன், மறைந்த தூத்துக்குடி பெரியசாமி ஆகியோர் ஏற்படுத்திய தடைகள் பல. அவர்கள் தங்களிடம் என்னைப் பற்றி தவறாக கூறியதையும் அறிவேன்.

இதை தலைவர் கலைஞர் உயிரோடு இருந்தபோது என்னிடம் சொன்னதும் உண்டு.

2019 நாடாளுமன்ற தேர்தல்.. கனிமொழி, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.. கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் என்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இரவும் பகலும் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தேன்; நானும் என்னுடைய நண்பர்கள் மற்றும் கட்சித் தோழர்களும் என் சொந்த செலவில் இரண்டு மூன்று வாகனங்களில் சென்று தேர்தல் பணியாற்றினோம்.

அதே போல ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தலின் போதும், பணி செய்தேன்.

இந்த இரு தேர்தல்களின் போதும், ஏறத்தாழ எழுபத்தைந்து நாட்கள் கோவில்பட்டியிலும் எனது சொந்த கிராமத்திலும் முகாமிட்டு பணியாற்றினேன்; அப்போது பலர் என்னிடம், ‘தி.மு.க. உங்களுக்கு என்ன செய்தது.? ஏன் இவ்வளவு சிரமமப்டுகிறீர்கள்’ என்று கேட்டனர்; வருத்தப்பட்டனர்.

ஆனால், நான் நேர்மையாக உண்மையாக பணியாற்றினேன். என்னால் கனிமொழிக்கு அதிகமான ஆதரவு – கூடுதலான வாக்குகள் கிடைத்ததை யாரும் மறுக்க முடியாது..

இதுவரை அந்த வட்டாரத்தில் வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சோ. அழகர் சாமி, நாராயணசாமி நாயுடுவுடைய விவசாய சங்கத்தின் தாக்கம், அந்த பகுதியில் எனது நீண்ட கால அரசியல் பணிகள்.. என்ற வகையில் அந்த வட்டாரத்தின் முக்கிய – அறியப்பட்ட புள்ளிகளாக திகழ்ந்தோம்.

கடம்பூர் ராஜூ என்பவர் பிற்காலத்தில் ஜெயலலிதாவால் அமைச்சர் ஆக்கப்பட்டார்.. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் பொறுப்பிலும் இருந்தார். அன்றைய தேர்தல் களத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக அவர் இருந்தார். அதிகாரம் அவர்கள் பக்கம் இருந்தது.

அதை மீறி என்னுடைய பணிகள் இருந்தன என்பது அனைவரும் அறிந்ததே..

இந்த வட்டாரத்தில் 1947-ல் இருந்து பல முக்கிய அரசியல் தலைவர்கள் இருந்தார்கள்.. பெருந்தலைவர் காமராஜர் கோவில்பட்டி மண்ணில் தன்னுடைய ஆரம்பகட்ட வாழ்க்கையை துவங்கியபோது அவருக்கு உதவி செய்தவர்களையும், அவர் இங்கு வரும்போது தங்கும் ராஜகோபால் வங்கியையும் மறக்க முடியாது.
மடத்துப்பட்டி கோபால நாயக்கர், ரா.கி., எஸ்.ஆர். நாயுடு, தேனி என்.ஆர்.டி. போன்றவர்கள் எல்லாம் காமராஜரின் அரசியல் வளர்ச்சிக்கு அடித்தளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தவர்கள்.

செல்வாக்கு இருந்தும் இவர்கள் எவரும் அமைச்சர் ஆக முடியவில்லை..

கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க=வில் அமைச்சர் ஆனார் என்பது வேறு விடயம்.

கனிமொழியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தேன்!.

வேதனை என்னவென்றால்..

தேர்தலில் வெற்றி பெற்ற கனிமொழி, நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்துகிறார்.. அதுவும் கோவில்பட்டி மந்தையில்!

அந்த கூட்டத்திற்கான அழைப்பிதழில் எனது பெயர் இல்லை.. கூட்டத்துக்கும் அழைப்பில்லை!

கோவில்பட்டி, சங்கரன்கோவில், சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, விளாத்திகுளம் பகுதிகளில், நான் சார்ந்த கூட்டங்களில், அழைப்பிதழில் என் பெயர் இல்லாமல்.. எனக்கு அழைப்பு இல்லாமல் நடந்தது இல்லை. இப்பகுதி மக்களுக்கு என் மேல் உள்ள அன்பினால்.. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இதுதான் சம்பிரதாயம்.

அந்த வட்டார மக்களே, ‘இதென்ன.. இப்படி’ என தலையில் அடித்துக்கொண்டு வேதனைப்பட்டனர்; சம்சாரிககளும், வியாபாரிகளும் என்னிடம் ஆதங்கத்தைக் கொட்டினர். இப்படியா கனிமொழி செய்வார்? என சொன்னதுண்டு.

இதைக் குறித்து உங்கள் பார்வைக்கு சுட்டிக்காட்டிய போது, நீங்கள் அதை பெரிதாக நீங்கள் எடுத்துக் கொள்ளவே இல்லை. பிறகு, இதை எதற்கு உங்களிடம் சொன்னேன் என்று வேதனையாக உணர்ந்ததும் உண்டு..

அது மட்டுமல்ல..

மறைந்த.. எழுத்தாளர் கிரா என்றால் நான் என்று தமிழகமே அறியும்..

கோவில்பட்டி வீதியில் கி.ராவுக்கு விழா நடக்கிறது… கனிமொழி, கீதா ஜீவன் செல்கிறார்கள்.. எனக்கு அழைப்பு இல்லை.

கீதா ஜீவனுக்கும் கி.ரா.வுக்கும் என்ன சம்பந்தம்..

கி.ராவின் கோபல்லபுர கிராமம் புதினம் பல கால தாமதத்திற்கு பின், காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் புதல்வி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.சி அவர்களது வாசகர் வட்டம் 1974 காலகட்டத்தில் வெளியிட நானும் சிட்டி சுந்தர்ராஜன் எடுத்துக்கொண்ட முயற்சிகள் கனிமொழிக்கு தெரியுமா..?

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 1989-ல் வேங்கட சுப்பிரமணியம் துணை வேந்தராக இருந்தபோது, கி.ரா. பணியில் சேர காரணமாக இருந்தவர்களில் நானும் ஒருவன்.

1980-களின் துவக்கத்தில் கி.ரா.வின் மணி விழாவை அண்ணன் கவிஞர் மீராவும், நானும் மதுரை காலேஜ் ஹவுஸ்ல் எடுத்தது… அவரது 75வது விழா, 80, 85 விழாக்களை சென்னையிலும் 90வது விழாவை புது டெல்லியில் டெல்லி தமிழ்ச்சங்கமும் தினமணி நாளிதழும் இணைந்து நடத்த நான் முன்முயற்சி எடுத்ததும், 95 விழா புதுவையில் நடந்த போது, என் தாயார் முதல் நாள் 98 வயதில் ( செப்டம்பர் 15) இறப்பு.. மறுநாள் கிராமத்தில் இருந்து புதுச்சேரிக்கு ஓடோடி வந்து நடத்தியது.. அங்கு அது மட்டுமல்ல.. 95 வது விழா, நல்லகண்ணு, நெடுமாறன், திரைப்படக் கலைஞர் சிவகுமார் போன்ற முக்கிய புள்ளிகள் கலந்துகொள்ள புதுவை மத்திய பல்கலை கழகத்தில் நடந்தது.

அந்த விழாவை ஒட்டி, கி.ரா.வை வாழ்த்தி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புதுவை முதல்வர் நாராயணசாமி ஆகியோரின் வாழ்த்துரைகளைப் பெற்றேன்.

இது குறித்து தங்களிடமும் கடிதம் கொடுத்ததோடு, கி.ரா. பற்றிய குறிப்புகளையும் அளித்தேன். ஆனால் தங்களின் வாழ்த்துச் செய்தி வரவில்லை.

உங்கள் உதவியாளர் தினேஷிடம் பல முறை பேசினேன். இறுதியில் அவர், ‘கி.ரா. ஒன்றும் தி.மு.க.வுக்கு சாதகமான நபர் இல்லையே..’ என்றார். பெரும் வேதனை ஏற்பட்டது எனக்கு. ஆனாலும், அதற்கு மேல் அதைப் பெரிதாக அடியேன் எடுத்துக்கொள்ளவில்லை.

தான் சொன்னதை இப்போது, தினேஷ் ஏற்கலாம்.. மறுக்கலாம்.. ஆனால், என் மனசாட்சியை தொட்டுச் சொல்கிறேன்.. என் பெற்றோர் மீது ஆணையாகச் சொல்கிறேன்.. நான் சொல்வது உண்மை.

ஆயிரம் நியாயங்கள் பேசுகிறீர்களே.. இதில் உள்ள நியாயம் சொல்லியும் உங்களுக்குத் தெரியவில்லை என்பதே என்னுடைய ரணப்பாடு..

கே.கே.நகர் பகுதி தி.மு.க. செயலாளர் தனசேகரன்
2001ல் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.. அவரை மீட்க எனது சட்டரீதியான முன்னெடுப்புகளை தாங்கள் அறிவீர்கள். மயிலை மாநகர் கடத்தப்பட்டு சம்பமும் உண்டு.

இவ்வளவு பணிகள் செய்தும்.. இந்த அசிங்கங்களையும் அவலங்களையும் நான் பார்க்க வேண்டி உள்ளதே என்பதை நினைத்து நான் வருந்தவில்லை.. அவமானகரமாக நினைக்கவில்லை..
இதுதான் தார்மீகமா பண்பாடா..!

எங்கள் பகுதியில் பிறந்தார் பாரதி.. நான் பாரதி நேசன்..

அவரது வரிகள்
சிறுமை கண்டு பொங்கி எழு என்பது!

அதற்கேற்றாற்போல, 2019 க்குப் பிறகே, ‘என்ன இப்படி’ என்று நானும் பட்டும் படாமல் இருந்தேன். அது தவறு என்றால் – அதற்கு நான் காரணம் அல்ல.

இடைப்பட்ட இந்த காலத்தில் கோவிட் தொற்று நோய் வேறு..!

இன்னும் எத்தனையோ விஷயங்கள் மனதிலாடுகின்றன… போதும்..

நான் காமராஜரில் இருந்து கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நெடுமாறன், வேலுப்பிள்ளை பிரபாகரன், ஜெபி,சஞ்சீவரெட்டி, இந்திரா காந்தி என அனைவரையும் பார்த்தவன்.. அனைவரிடமும் தொடர்பில் இருந்தவன்..

நான் யாரையும் குறை கூறவோ பழி சொல்லவோ அவசியமில்லை..

நிராகரிப்பு என்பது வெளிப்படையாகத் தெரிவதில்லை!!. அன்று நாம் வேண்டுமென்றே ஒதுக்கப்பட்டோம், நிராகரிக்கப்பட்டோம் என்பதை புரிந்து கொள்வதற்கும் சில காலம் தேவைப்படுகிறது.புறக்கணிப்புகளும் பாராமுகமும் தொடர்ந்தால்.. எனக்கென்ன வந்தது என்கிற எண்ணமே யாரானாலும் ஏற்படும். ஆனாலும் நான், அரசியலாளர் என்ற முறையில் எனது பணிகளைத் தொடர்ந்து கொண்டுதான் வந்தேன்.

எவ்வளவு நசுகல்கள் உடையதாயினும்
வாழ்க்கை சுவாரசியமானதே. நிதர்சனங்கள் கனத்த
உணர்வின் அடர்த்தியை
அதிகமாக்க இருப்பின் நம்பகத்தன்மையை அடர்வனமொன்றில் யானைத் தந்தங்களின்
வலுசேர்க்கின்றன..
*
போரினில் யானை விழக்கண்ட – பல
பூதங்கள் நாய்நரி காகங்கள் – புலை
ஓரி கழுகென்றிவை எல்லாம் – தம
துள்ளம் களிகொண்டு விம்மல்போல் – மிகச்
சீரிய வீமனைச் சூதினில் – அந்தத்
தீயர் விழுந்திடக் காணலும் – நின்று
மார்பிலும் தோளிலும் கொட்டினார் – களி
மண்டிக் குதித்தெழுந்தாடுவார்…

இன்றைய உலக அரசியல் வெளியின் ஆரவாரக் காட்சியினை அன்றே பாரதி சொன்ன வரிகளை…

குறையொன்றுமில்லை!
இத்துடன் நிறைவு செய்கிறேன்..நன்றி..” என்று கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply