தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கோரிக்கை!

Share this News:

சென்னை (21 ஜூன் 2020): தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுத் தேர்வு எழுதவுள்ள பிற மாநில மாணவர்களின் நலனையும் தமிழக அரசு கவனத்தில்கொண்டு, அவர்களுக்கும் பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வதோடு, அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கடந்த 09.06.2020 அன்று தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள், “கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை முழுவதுமாக ரத்துசெய்வதோடு, அத்தேர்வர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவித்து அரசாணை வெளியிட்டிருந்தார்.

கொரோனா நோய்த்தொற்று தீவிரம்பெற்றுள்ள சூழலில், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை மனதார வரவேற்கிறேன். அதேசமயம் தமிழக அரசின் இந்த அரசாணை, தமிழகம் தவிர்த்துப் பிற மாநிலங்களில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொருந்துமா என்கிற கேள்வியும் குழப்பமும் நிலவுகிறது.

குறிப்பாக மும்பை மாநகரில் தமிழ்வழிப் பள்ளிக்கூடங்களில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தமிழக அரசின் ஆணை தங்களுக்குப் பொருந்துமா என்கிற எதிர்பார்ப்பிலும், அப்பள்ளியின் நிர்வாகத்தினர் குழப்பத்திலும் இருக்கின்றனர்.

இதேநிலைமைதான் வேறு சில மாநிலங்களிலும் நிலவக்கூடும் எனக் கருதுகிறேன். எனவே தமிழக அரசின் பாடத்திட்டத்தின்கீழ் கல்வி கற்றுத் தேர்வு எழுதவுள்ள பிற மாநில மாணவர்களின் நலனையும் தமிழக அரசு கவனத்தில்கொண்டு, அவர்களுக்கும் பொதுத்தேர்வை முழுமையாக ரத்து செய்வதோடு, அவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவிக்க வேண்டுமென தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தெரிவித்தார்.


Share this News: