வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி – கனமழைக்கு வாய்ப்பு!

Share this News:

சென்னை (05 டிச 2022): அந்தமான் அருகே இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால், தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும்அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச. 5) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக்கூடும்.

பின்னர், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 8-ம் தேதி வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் அருகில் நிலைபெறும்.

குமரிக்கடல் பகுதிகளில் இருந்து வடக்கு கேரளா வரை நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டிச. 5-ம் தேதி (இன்று) தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச. 6-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 7-ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், டிச. 8-ம் தேதி தமிழகம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிச. 5-ம் தேதி அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், 6-ம் தேதி மேற்கூறிய பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply