அரபு நாடுகளில் வசிக்கும் நாங்கள் இந்தியர்கள் இல்லையா? – குமுறும் தமிழர்கள்!

443

சென்னை (15 ஜூன் 2020): அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களை மீட்பதில் தமிழக அரசும் மத்திய அரசும் மெத்தனம் காட்டி வருவதாக அங்கு வசிக்கும் தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உலகமெங்கும் கொரோனா பரவி வரும் நிலையில் வெளி நாடுகளிலிருந்து ஊருக்கு வர முடியாமல் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர இந்திய அரசு கொண்டு வந்துள்ள வந்தே பாரத் திட்டத்தின் விமானங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

அந்த வகையில் முதல் இரண்டு கட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களின் பட்டியலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டமாக விமானங்களை இயக்குவது ஜூன் 16ம் தேதி தொடங்கி ஜூலை 2ம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரத்திற்கு 56 விமானங்கள் இந்தியாவில் இருந்து இயக்கப்பட உள்ளது. இதில் ஒரு விமானம் கூட தமிழகத்திற்கு அறிவிக்கப்படவில்லை ஆனால் அதேநேரம் கேரளாவிற்கு 44 விமானங்கள் இயக்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, டெல்லி, ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விமானங்கள் அரபு நாடுகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  "பல்லக்கு தூக்கி ஆதாயம் பெறும் தினமலர்"-துரைமுருகன் காட்டம்!

ஆனால் தமிழகத்திற்கு ஒன்று கூட இயக்கப்படாதது குறித்து அரபு நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடையே வேதனை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பல கோரிக்கைகளை வைத்தும் அரசு செவிசாய்க்கவில்லை என அங்கு வாழும் தமிழர்கள் குமுறுகின்றனர்.

இதற்கிடையே குவைத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு வர வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “குறுகிய காலப் பணிக்காக குவைத் சென்ற 350 தமிழர்கள் 3 மாதங்களாக தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களை அழைத்துவர சம்பந்தப்பட்ட நிறுவனமே தயாராக உள்ள நிலையில் அதற்கான அனுமதியை வழங்காமல் தமிழக அரசு இருப்பது சரியன்று, முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.