முஸ்லிம்களுக்கு எதிராக நான் பேசவில்லை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பல்டி!

Share this News:

சென்னை (20 அக் 2019): நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தின்போது முஸ்லிம்களை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இப்போது “அப்படி எதுவும் பேசவில்லை” என்று பல்டி அடித்துள்ளார்.

இடைத்தேர்தல் பணிக்காக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு களக்காடு ஒன்றியம் கேசவனேரி கிராமத்துக்கான பொறுப்பும் ராஜேந்திர பாலாஜியிடம் கொடுக்கப்பட்டிருந்தது.

அதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் என்கிற ஃபைசல் உள்ளிட்ட சிலர், அமைச்சரை சந்தித்து தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்துத் தருமாறு மனு அளிக்கச் சென்றுள்ளனர்.

மனு அளிக்கச் சென்றவர்களிடம் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாய மக்களையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார். அத்துடன், “தமிழகத்தின் ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் காஷ்மீரத்தில் நடந்தது போல செய்துவிடுவோம்” என்றும் மிரட்டியுள்ளார். அதற்கு, தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்ததுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மனு அளித்தவர்கள் தெரிவிக்கையில், நாங்கள் மனு அளிக்க சென்றோம், எங்களைப் பார்த்ததும் காரில் இருந்தபடியே திடீரென ஆத்திரத்துடன் கத்தத் தொடங்கினார்.

“முஸ்லிம்கள் எங்களுக்கு ஓட்டுப்போட மாட்டீங்களே… நாங்க ஏன் உங்களுக்கு உதவி செய்யணும்? யாருக்கு ஓட்டுப் போட்டீங்களோ அவங்கள்ட்டயே மனுவைக் குடுங்க. நீங்க ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த தி.மு.க எம்.பி ஞானதிரவியத்திடம் மனுவைக் கொடுங்க. நீங்களும் ஓட்டுப்போட மாட்டீங்க. கிறிஸ்டினும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டான். பிஷப், பாதிரியார்கள் எல்லோரையும் கூப்பிட்டுச் சொல்லிடுவாங்க. நீங்க ரெண்டு பேரும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்க. அப்புறம் ஏன் உங்களுக்கு நான் செஞ்சு தரணும்?” என்றதாக குமுறினர்.

இந்நிலையில் நிருபர்களை சந்தித்தபோது இதுகுறித்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “என்னை சந்திக்க வந்தவர்கள் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள். இரவு 9 மணிக்கு, அவர்கள் என்னை சந்திக்க வந்ததற்கு என்ன காரணம்? அதிமுகவிற்கு ஓட்டுப்போட முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்கள் தயாராகிவிட்டனர். வேலூர் லோக்சபா தேர்தலில் 30 சதவீத முஸ்லீம்கள் ஓட்டு போட்டனர். அதிமுகவிற்கு ஓட்டு கிடைக்கும் என்பதால், என்னை வம்புக்கு இழுக்கலாம் என 9 மணிக்கு மேல் வந்தனர்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியால் திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகம். இதன் பின்னணியில் திமுக உள்ளது. எதையும் வெளிப்படையாக பேசுபவன் நான். அதிமுகவில் பிரச்னைகள் நடந்தாலும் முதல்வர், துணை முதல்வரிடம் பேசுவேன். சில முறை எனக்கு பிரச்னை கூட வந்தது. அன்று என்னை சந்திக்க வந்தவர்களை, காலையில் வரும்படி கூறிவிட்டு சென்றேன். அவர்கள் என் வீட்டில் சாப்பிட்டு தான் சென்றனர். அவர்கள் என்னிடம் பேசியது 10 நிமிடம் கூட இருக்காது. ஆனால், ஜமாத் நபர்களை புறக்கணித்து விட்டேன் என திமுக வதந்தி பரப்புகிறது” என்றார்.


Share this News:

Leave a Reply