கொரோனாவின் கோர முகம் – மகனும் தாயும் மரணம்!

215

கடலூர் (12 ஆக 2020): கொரோனா பாதிப்பால் மகன் இறந்த அதிர்ச்சி காரணமாக தாயும் இறந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டானா கார தெருவில் வசித்து வரும் கலியமூர்த்தி – மீனாட்சி தம்பதிகள். இவர்களின் மகன் சூரியகுமார். வயது 50. இவருக்கு கலா (வயது 45) என்ற மனைவியும், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

இவர் காட்டுமன்னார்கோவில் செட்டியார் ரோட்டில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வந்தார்

சூர்யகுமாருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் உள்ளூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு காய்ச்சல் அதிகரிக்கவே மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைப் படிச்சீங்களா?:  இந்தி வெறி பிடித்த வங்கி மேலாளர் பணியிட மாற்றம்!

இதையடுத்து கடந்த ஐந்தாம் தேதி சூரியகுமார் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த சூரியகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் அவரது குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகன் இறந்த செய்தி கேட்ட அவரது தாயார் மீனாட்சி (வயது 75)க்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அவரும் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.