எம்பி நவாஸ்கனி மற்றும் மமகவினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதல் – மனமேல்குடியில் போலீஸ் குவிப்பு!

Share this News:

அரந்தாங்கி (02 ஏப் 2021): ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி மற்றும் மமகவினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுக்கா, கோட்டைப்பட்டினம் அருகில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி.M.P அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்கள்.

அம்மாபட்டினம் பகுதியில் வாக்கு சேகரித்து விட்டு, கோட்டைப்பட்டினத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்து கொண்டிருக்கும் வேளையில் இடையில் உள்ள புதுக்குடி என்ற ஊரில், அங்கு தயார் நிலையில் இருந்த பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பலால் திட்டமிட்டு நவாஸ்கனி.M.P வந்த கார் தாக்கப்பட்டது.

இந்த திட்டமிட்ட தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத நவாஸ்கனியின் கார் ஓட்டுனர் சாமர்த்தியமாக செயல்பட்டு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக குண்டர்கள் இருந்த இடத்தைவிட்டு வாகனத்தை வெளியேற்றிய பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர்.

பின்னர் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் எம்பி அவர்களின் காரை பின்தொடர்ந்து, வாக்கு சேகரிப்பதற்காக வந்த மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக குண்டர்களால் மிக கடுமையான ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்.

இதில் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் இரண்டு பேர் மிகக் கடுமையான காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இரண்டு நபர்கள் மற்றும் அவர்கள் வந்த ஒரு பைக் காணாமல் போனது.

நவாஸ்கனி எம்பி அவர்கள் வந்த காரின் மீதும் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் மீதும் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலை அறிந்து அப்பகுதியில் கூடிய மக்கள், தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரியும், காணாமல்போன மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் இருவரையும் கண்டுபிடித்து தரக் கோரியும், மிகப்பெரும் சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் அப்பகுதியில் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அக்கூட்டத்தை சமாளிப்பதற்காக துணை ராணுவ படை அங்கு வரவழைக்கப்பட்டது. சிறிது நேரத்தில் காணாமல் போன இரு நபர்களும் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு சாலை மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

பிறகு சிறிது நேரத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர்.M.P அவர்கள் வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மற்றும் தோழமை கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என வாக்குறுதி அளிக்கப்பட்ட பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.


Share this News:

Leave a Reply