பாபர் மசூதி இடிக்கப்பட்டது சதிச்செயல் இல்லையா? – அசாதுதீன் உவைஸி வேதனை!

Share this News:

ஐதராபாத் (30 செப் 2020): பாபர் மசூதி இடிக்கப்பட்டது சதிச்செயல் இல்லையா? என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் உவைஸி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னர் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து, செப்டம்பர் இறுதிக்குள் தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு வழங்கினார். அப்போது, பாபர் மசூதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கத் தவறியதால் 32 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் உவைஸி, “வரலாற்றில் இன்றைய நாள் சோகமான நாள். மசூதி இடிக்கப்பட்டது சதிச்செயல் இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. இதற்கு எத்தனை நாட்கள்? எத்தனை மாதங்கள் தயாரிப்பு தேவைப்படும்?. தண்டிக்கப்பட வேண்டியவர்களை பாஜக அரசு பதவி கொடுத்து அழகு பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply