மகாத்மா காந்தியின் படுகொலையை நினைவுகூர்வது குற்றமா?

Share this News:

சென்னை (03 பிப் 2022): மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்துத்துவ பயங்கரவாதி கோட்சேவால் தேசத்தந்தை காந்தி படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூர்வது குற்றமா? என கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முகமது ரசீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நமது நாட்டின் சுதந்திரத்திற்காக முன்னணியில் நின்று போராடிய தலைவரும், தேசத்தந்தை என்று அனைவராலும் அழைக்கப்படக் கூடியவருமான மகாத்மா காந்தி அவர்களை இந்துத்துவ பயங்கரவாதி கோட்சே ஜனவரி 30, 1948ஆம் ஆண்டு சுட்டுப் படுகொலை செய்தான். காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூறும் வகையில் போஸ்டர், துண்டுபிரசுரங்கள், கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள், நினைவேந்தல்கள் என நடத்துவது வழமை. இதில் சில சமயங்களில் காவல்துறை போஸ்டர் ஒட்டியவர்கள், நினைவேந்தல்கள் நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும் அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்று வழக்கிலிருந்து விடுதலை பெறுவதும் தொடர்படியாக நிகழக்கூடியது.

ஆனால், இந்த வருடம் காந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தில் நமது மாநிலத்தின் முதல்வர் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் “கோட்சேவின் வாரிசுகளுக்கும், அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம்!” என்று பதிவிட்டிருக்கையில் முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் தமிழக காவல்துறையில் உள்ள காவல் அதிகாரிகள் கோட்சேவின் பெயர் இடம்பெற்றிருந்த போஸ்டர்களை தமிழகம் முழுவதும் கிழித்தும், கோவையில் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் காந்தியைக் கொன்றது கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள் என்பதனை கூறும்போதும் திடீரென அந்தப்பகுதியின் காவல் துணைக் கண்காணிப்பாளரும், வேறு சில காவல் அதிகாரிகளும் இடைமறித்து கோட்சே என்று சொல்லக்கூடாது என்றும், கோட்சே என்ற பெயரை மதரீதியிலான வார்த்தையாக மாற்றி அத்துமீறி நடந்து கொண்ட நிகழ்வுகளும் நடந்துள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கின்றது.

முதல்வரின் நிலைபாடும், காவல்துறையின் செயல்பாடும் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் தான் காவல்துறை செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், இந்த விசயத்தில் காவல்துறையின் இத்தகைய அடக்குமுறையான போக்கை தமிழக அரசு தடுத்து, அத்துமீறி நடந்து கொண்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply