ராகுல் காந்தி மீது பொங்கிய பொன்.ராதாகிருஷ்ணன்!

நாகர்கோவில் (20 மே 2020): ராகுல் காந்தி விளம்பர மனநிலையுடன் செயல்படுகிறார் என்று முன்னாள் மத்திய இணை அமைசர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெள்ளாடிச்சிவிளை பகுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களை சந்தித்து பேசிய அவர் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, “வெள்ளாடிச்சிவிளை பகுதி தனிமைப்படுத்துதல் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த பகுதி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர்களிடம் அறிவுறுத்தி உள்ளேன்.

பள்ளிகள் ஜுன் மாதம் திறக்கப்பட வேண்டும். முறைப்படி பத்தாம் வகுப்பு தேர்வு ஒரு மாதத்திற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். இந்த தேர்வுகளை நடத்தா விட்டால் அடுத்த நிலைக்கு மாணவர்கள் போவதற்கு சிரமம் அடைவார்கள். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மே மாதம் முழுவதும் பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் தேர்வு எழுதி முடிவுகள் வெளியானால்தான் குறைந்தபட்சம் ஜூலை மாதத்தில் அவர்கள் மேற்படிப்புக்கு செல்ல முடியும்.

இதைப் படிச்சீங்களா?:  எங்களுக்கு தெரியாமலேயே இதெல்லாம் நடக்குது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!

ராகுல் காந்தி விளம்பர மனநிலையுடன் செயல்பட்டு வருகிறார். ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடக்கூடாது. எது செய்தாலும் விளம்பரத்திற்காக செய்யக்கூடாது. இது கடுமையான பாதிப்புகள் உள்ள கால கட்டமாகும். எனவே இந்த காலகட்டத்தில் இப்படி செய்யக்கூடாது.

காசி விவகாரத்தில் அவர் தமிழ்நாட்டு பெண் குலத்திற்கு மிகப்பெரிய அவமானம் ஏற்படுத்தியுள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் வழக்கில் வக்கீல்கள் ஆஜராக கூடாது என்று முடிவு எடுத்துள்ளனர். இது மகிழ்ச்சியான விஷயம். காவல் துறை அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு வருமானம் போதவில்லை என்று நினைத்து மதுபான கடைகளின் நேரத்தை அதிகரித்திருக்கலாம். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை” என்று கூறினார்.