கொரோனாவால் தந்தையை இழந்த மகனுக்கு திமுகவில் முக்கிய பதவி!

153

சென்னை (26 ஜூலை 2020): கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நே.சிற்றரசு அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக ராஜா அன்பழகன் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக தலைமை கழக ஒப்புதலோடு நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவர்” என குறிப்பிட்டுள்ளார்.

இதைப் படிச்சீங்களா?:  விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை! தமிழக அரசு அதிரடி!

அதேபோல திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவெய்திய காரணத்தினால் மாவட்ட கழக பணிகள் செவ்வனே நடைபெற நே.சிற்றரசு சென்னை மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.