பாஜகவும் அதன் ஆதரவாளர்களும்தான் உண்மையான தேச விரோதிகள் – சீமான்!

Share this News:

சென்னை (09 பிப் 2022): மாணவர்களின் மனங்களில் மதவாத நச்சுப்பரப்புரையை விதைத்து மதமோதலுக்கு வித்திடுவதாக பாஜக மீது சீமான் சாடியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“கர்நாடக மாநிலத்தின் கல்விக்கூடங்களில் இசுலாமியப்பெண்கள் தங்களது மார்க்கத்தின்படி, உடை உடுத்தி வருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து, கடந்த சில வாரங்களாக மதவெறி இந்துத்துவக்கும்பல் நிகழ்த்தி வரும் வன்முறை வெறியாட்டங்களும், பிரித்தாளும் சூழ்ச்சிகளும் அதிர்ச்சியளிக்கின்றன. கல்விக்கொள்கையையும், தேர்வு முறையையும் காவிமயப்படுத்தும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, தற்போது மாணவர்களின் மனங்களிலும் மதவாத நச்சுப்பரப்புரையை விதைத்து மதமோதலுக்கு வித்திடுவது கடும் கண்டனத்திற்குரியது.

பன்மைத்துவத்தின் மூலம் உலகை ஈர்த்த இந்தியப் பெருநாட்டில் ஒற்றைத்தன்மையைப் புகுத்தி, மதத்தால் மக்களைப் பிளந்து பிரிக்க வழிவகை செய்திடும் பாஜகவின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது. வளர்ச்சியென்று வாய்கிழியப் பேசி ஆட்சியதிகாரத்திற்கு வந்துவிட்டு, மதவாதத்தைத் தூண்டிவிட்டு நாட்டைக் கூறுபோட நினைக்கும் பாஜகவின் ஆட்சியாளர்களும், ஆதரவாளர்களும்தான் இந்நாட்டின் உண்மையான தேசவிரோதிகள்; பிரிவினைவாதிகள். இந்நாட்டுக்குள்ளேயும், வெளியேயுமென பல்லாயிரக்கணக்கான பிரச்சினைகள் முற்றுமுழுதாகச் சூழ்ந்திருக்க அவற்றைத் தீர்ப்பதற்கும், போக்குவதற்குமாக வேலைசெய்யாது மதவாத அரசியலைக் கையிலெடுக்கும் பாஜகவின் செயல்பாடுகள் அருவருக்கத்தக்கது.

பிரதமர் நரேந்திரமோடி குஜராத்தின் முதல்வராக இருக்கும்போது அம்மாநிலத்தில் நிகழ்த்தப்பட்ட இசுலாமிய மக்களின் உயிர்களைக் காவுகொண்ட மதவெறிப்படுகொலைகளையும், சூறையாடல்களையும் நாடு முழுமைக்குமாக நடத்தி, அதன்மூலம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் பாஜக ஆட்சியாளர்களின் வஞ்சகச்செயல்பாடுகள் எதன்பொருட்டும் ஏற்க முடியாத மனிதப்பேரவலமாகும்.

விரும்பிய மதத்தைத் தழுவதற்கும், அதுதொடர்பான வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதற்கும், அதுகுறித்தக் கருத்துப்பரவலைச் செய்வதற்குமான வாய்ப்பை இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனம் அடிப்படை உரிமையாக வரையறுத்து வழங்கியுள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக, இசுலாமியப் பெண்களின் உடைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும், மதவாத அடையாளமானக் காவித்துண்டை அணிந்துக் கல்விக்கூடங்களுக்கு வருகைதருவதுமானப் போக்குகள் ஒருபோதும் ஏற்புடையதல்ல.

‘தான் வாழுகிற நாட்டைவிட, தான் சார்ந்திருக்கும் மதம்தான் பெரிதென்று நாட்டின் ஆட்சியாளர்கள் எண்ணிச் செயல்படத் தொடங்கினால், இந்நாடு நாசமாவதை யாராலும் தடுக்க முடியாது’ எனும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் எச்சரிக்கை மொழிகளைத்தான் இத்தருணத்தில் நாட்டு மக்களுக்கு நினைவுபடுத்தத் தோன்றுகிறது.

சூழ்ந்திருக்கும் பேராபத்தை உணர்ந்து, நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நம்பிக்கைத் தூண்களாக திகழும் இளைய தலைமுறைகளின் மனதில் மதவாத வன்மத்தை விதைத்து, அவர்களது எதிர்காலத்தையே அழிக்க நினைக்கும் மனிதகுல விரோதியான பாஜகவின் எதேச்சதிகாரச்செயல்பாடுகளையும், கொடும் வன்முறைச்செயல்களையும் தடுத்து நிறுத்தி, நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், சமூகத்தின் நல்லிணக்கத்தை நிலைநாட்டவுமாக அணிதிரள வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பும், கடமையுமெனக்கூறி, அறைகூவல் விடுக்கிறேன்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் நடைபெற்று வரும் மதவெறிச்செயல்கள் தமிழ்நாட்டிலும் தலைதூக்காது தடுக்க மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு, இந்துத்துவக்கும்பலை இரும்புக்கரம் கொண்டு, சட்டத்தின் துணைநின்று ஒடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு சீமான் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


Share this News:

Leave a Reply