திமுகவில் பல திருப்பங்கள் நடக்கும் – விலக்கப்பட்ட வி.பி துரைசாமி பரபரப்பு பேட்டி!

சென்னை (22 மே 2020): திமுகவிலிருந்து இன்னும் பலர் விரைவில் வெளியேறுவார்கள் என்று திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை சீட் கொடுக்காததால் திமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர், விபி துரை சாமி, மு.க ஸ்டாலினுக்கு எதிராக சில கருத்துக்களை பொது வெளியில் முன்வைத்தார்.

இதனை அடுத்து, கட்சியில் இருந்து தற்காலிகமாக விலக்கப்பட்ட துரை சாமி, சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதனை அடுத்து, கட்சிப் பொறுப்பில் இருந்து துரை சாமி நீக்கப்பட்டு, அப்பொறுப்புக்கு அந்தீயூர் செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.

இதனை அடுத்து, இன்று காலை அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அவர் பாஜகவில் இணைந்தார்.

இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய துரை சாமி “நான் திமுக வில் நீண்ட காலம் உழைத்தவன். கடந்த சில வருடங்களாக அந்த இயக்கம் துவங்கப்பட்ட நோக்கத்தில் இருந்து பிறழ்ந்து செல்கிறார்கள்.பாஜக முன்னேறிய சமூக மக்களுக்கான கட்சி என்று எங்களுக்கு போதித்து விட்டார்கள்.

இதைப் படிச்சீங்களா?:  பாஜக வேட்பாளர் உறவினர் வீட்டில் 18.67 லட்சம் பணம் பறிமுதல் -போலீசாரை அடித்து உதைத்த பாஜகவினர்!

ஆனால், இன்று தான் தெரிந்தது பாஜக அனைத்து மக்களுக்குமான கட்சி. அறிவாலயத்தில் இருந்து கமலாலயத்தில் வந்துள்ளேன். ஜாதி, மதம் இல்லை என்று பேசுகிறார்கள். ஆனால், அங்கு தான் ஜாதி, மதத்தை உரம் போட்டு வளர்க்கிறார்கள்.

நான் பதவிக்காக அலைபவன் அல்ல. இன்னும் நிறைய பேர் திமுகவில் இருந்து விலக காத்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அண்ணா, பெரியார் இருந்திருந்தால் இதற்கு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

புரட்சிகரமான பொருளாதார கொள்கைகளை அறிவித்து உள்ளார் மோடி. எனவே, இந்தியா இதன் மூலம் வல்லரசாகும்.

பாஜக அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு தலைவர் பதவி கொடுத்ததுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அருந்ததிய மக்களும் தங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறார்கள். பாஜக என் தம்பி முருகனை அங்கீகரித்து உள்ளது. எனவே நான் இங்கு இணைத்துள்ளேன் என்றார்.