அதிமுக பாமக இடையே புகைச்சல்!

Share this News:

சென்னை (06 ஜன 2020): பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை தொடர்ந்து அதிமுக பாமக இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது.

கடந்த 31-ந்தேதி திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூரில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் கூடியது. டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி தொடங்கி கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அரசியலில் பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வரும் பல கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றியுள்ளனர்.

நிறைவேற்றப்பட்ட 18 தீர்மானங்களில் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது என்பது இந்த பொதுக்குழுவுக்குப் புதிது. ஆனால், தேசிய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்து அன்புமணி வாக்களித்துள்ள நிலையில், தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது முரணாக இருக்கிறது. பொதுக்குழுவில் பேசிய பலரும் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. தலைமை தங்களை வஞ்சித்து விட்டதாகவும் கெஞ்ச வைத்ததாகவும் குமுறியிருக்கிறார்கள். குறிப்பாக, கூட்டணி தர்மத்தை மீறி பெரியண்ணன் பாணியில் அ.தி.மு.க. மா.செ.க்கள் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், மைக் பிடித்த பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸின் பேச்சில் அ.தி.மு.க.வுக்கு எதிராக கோபம் கொப்பளித்திருக்கிறது. “தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. கூட்டணியே வேண்டாம் என்கிற கொள்கையில் இருந்தோம். ஆனால், அந்த கொள்கையை மாற்றி கூட்டணி என்கிற நிலைப்பாட்டை எடுத்து அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம். ஆனா, ஏன் கூட்டணிக்குள் போனோம்னு யோசிக்க வைத்துவிட்டார்கள். ஒரு சீட்டுக்கு அரை சீட்டுக்கு கால் சீட்டுக்குன்னு கெஞ்ச வைத்து விட்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலோடு 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வந்தது. ஆட்சியை தக்க வைக்க இடைத்தேர்தல் எங்களுக்கு முக்கியம். விட்டுக்கொடுங்கள். உள்ளாட்சியில் சரி செய்யப்படும் என்றனர். விட்டுக்கொடுத்தோம். நாம் கூட்டணி சேராவிட்டால் அ.தி.மு.க. ஆட்சி இன்றைக்கு இருந்திருக்காது. உள்ளாட்சியில் எங்கள் கட்சியில் உழைக்கிறவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என சொல்லி போராடியும் குறைந்த அளவே தந்தனர். தேர்தலில் கூட்டணியை அங்கீகரிக்கவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது” என அ.தி.மு.க.வை கடுமையாக தாக்கினார். இதனை பொதுக்குழு உறுப்பினர்கள் கைதட்டி ஆமோதித்தனர்.

இறுதியில் பேசிய டாக்டர் ராமதாஸ், “பல மாநிலங்களில் இளைஞர்கள் முதலமைச்சர்களாக பதவிக்கு வந்திருக்கிறார்கள். வெறும் அரசியல் பின்புலம் மட்டுமே இதற்குக் காரணம் கிடையாது. மக்களிடம் நெருக்கம் வேண்டும். அத்தகைய உழைப்பு பா.ம.க.வில் இருப்பதாக தெரியவில்லை. கடுமையாக உழைத்தால் மட்டுமே 80 தொகுதிகளில் 80 லட்சம் வாக்குகளைப் பெற முடியும். அப்படி வாக்குகளை வாங்கினால்தான் ஆளும்கட்சியாக பா.ம.க. வரும். பதவியை வாங்குகிற வரையில் தான் நீங்கள் உழைப்பதாக தெரிகிறது. அதற்குபிறகு யாரும் உழைப்பதில்லை. உழைக்க தயாராக இல்லாதவர்கள் பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகி விடுங்கள்” என்றார் மிக கோபமாக.

இதன்மூலம் விரைவில் பாமக அதிமுக கூட்டணியிலிருந்து விலகக் கூடும் என தெரிகிறது.


Share this News:

Leave a Reply