பிப்ரவரி 14 ஐ கறுப்பு இரவாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை – ஸ்டாலின் கண்டனம்!

சென்னை (15 பிப் 2020): குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டக் காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய அத்துமீறலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்ல்

இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்திய எடப்பாடி அரசின் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு; கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு அவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் நேற்றைய தினம் (14.2.2020) மாலை முதல் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், இம்மூன்றையும் கண்டித்து தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், அமைதியான வழியில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

சுமார் ஐந்து மணிநேரத்துக்கு மேல் இந்தப் போராட்டம் நீடித்துள்ளது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாகத் திரண்டு நிரம்பி வழிந்த வெகுமக்கள் போராட்டமாக அது நடந்தது. அந்தப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் அமைதியாக நடப்பதைப் பார்த்தால் டெல்லி எஜமானர்கள் சினம் கொள்வார்களே என எண்ணிய அ.தி.மு.க அரசு, காவல்துறையை ஏவி அப்பெருங்கூட்டத்தைக் கலைக்க முடிவெடுத்தது.

நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு, அமைதியாக இருந்த பொதுமக்கள் மீது, எந்த விதக் காரணமுமின்றி, தடியடிப் பிரயோகம் செய்து அராஜகம் செய்துள்ளார்கள். பெண்களின் பாதுகாப்புக்காக நின்றிருந்தவர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர்.

தாக்குதலில் பலரும் ரத்தக் காயமடைந்துள்ளனர். ஜனநாயக ரீதியாகப் போராடியவர்களை, வேண்டுமென்றே தடியடி செய்து கலைத்து போராட்டத்தை வன்முறைப் பாதைக்குத் திருப்பி, அதனை வன்முறைப் போராட்டமாகச் சித்திரிக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டுள்ளது காவல்துறை.

காவல்துறையின் இந்தச் சதிச்செயல் தமிழகம் முழுவதும் காட்டுத் தீயைப் போலப் பரவி, சென்னை முழுவதும் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் பொதுமக்களைச் சாலைக்கு வந்து ஆர்ப்பாட்டம், மறியல், போராட்டங்கள் நடத்தும் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியது. பிப்ரவரி 14ம் நாள் இரவு என்பது ‘கறுப்பு இரவு’ என்று சொல்லத்தக்க வகையில் மாறிவிட்டது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்தது மட்டுமல்லாமல், அதனை எதிர்த்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவும் மறுத்து வருகிறது தமிழக அரசு. குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகைப் பதிவேடு ஆகியவற்றை ஆமோதித்து தாராளமாகத் தலையாட்டி வரவேற்கும் தமிழக அரசு, இவற்றுக்கு எதிராகப் போராடும் மக்களைத் தடியடி கொண்டு கலைக்கிறது.

ஜனநாயகத்தைத் தானும் காப்பாற்றாமல், ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் ஆவேசமாக அடித்து விரட்டும் அராஜக ஆட்சியாக எடப்பாடி பழனிசாமி ஆட்சி மாறிவருவதன் அடையாளம் தான், வண்ணாரப்பேட்டை நிகழ்வுகள். அமைதி வழியில் போராடியவர்கள் மீது, தடியடி நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கைது செய்யப்பட்ட அனைவரும் உடனே விடுதலை செய்யப்படுவது மட்டுமல்ல, அவர்கள் மீதான வழக்குகளும் திரும்பப் பெறப்பட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, “மக்கள் குரலே மகேசன் குரல்” என்பதை உணர்ந்து, மக்களை உரிய முறையில் மதித்து, கண்ணியத்துடன் நடத்தக் கற்றுக் கொண்டு, ஜனநாயகப் போராட்டங்களை ஏற்று அங்கீகரிக்கும் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஹாட் நியூஸ்:

பாடதிட்டங்களில் உள்ள நச்சுக் கருத்துகள் அகற்றப்படும் – கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்!

பெங்களூரு (30 மே 2023): கர்நாடகாவின் நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, வெறுப்பு அரசியலை பொறுத்துக்கொள்ள முடியாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். தனது இல்ல அலுவலகமான...

ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றிபெற பாஜகவே காரணம் – புழுதியை கிளப்பும் அண்ணாமலை!

சென்னை (30 மே 2023): ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமே பாஜக தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...

உயிர் நண்பனின் இறுதிச் சடங்கில் தீயில் குதித்து நண்பர் தற்கொலை!

லக்னோ(28 மே 2023): புற்றுநோயால் உயிரிழந்த தனது நண்பரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட 40 வயதுடைய நபர் ஒருவர் தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது....