பிபிசி ரெய்டு – ஊடக சுதந்திரம் பாழடிப்பு: ஸ்டாலின் கண்டனம்!

Share this News:

சென்னை (14 பிப் 2023): பிபிசி அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த பதிவில் ‘எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை. அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்’ என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. ஊடக அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினார்கள். அலுவலகத்துக்குள் சென்ற அதிகாரிகள் முதலில் ஊழியர்களின் செல்போன்கள் மற்றும் லேப்டாப்களை பறிமுதல் செய்துவிட்டு விசாரணை நடத்தி உள்ளனர்.

வருவாய் தொடர்பான ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. நாளையும் சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ள நிலையில் இந்த சோதனை நடத்தப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்தவண்ணம் உள்ளனர்.


Share this News:

Leave a Reply