பறிபோகும் தொழிலாளர் உயிர்கள் – நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாநில அரசுகள்!

Share this News:

சென்னை (17 ஜூலை 2020): நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் “மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலத்தில் உயிர் பறிபோகும் நிலையில் நீதிமன்ற உத்தரவை மாநில அரசு மதிக்கவில்லை என்று தமிழ் நாடு பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

‘சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் நேற்று முன்தினம் (15.07.2020) கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது இரண்டு துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இதே போன்று கடந்த ஜூலை 2ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த நான்கு துப்புரவு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

பூமியில் இருந்து பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலவு, செவ்வாய், புதன் என பல்வேறு கோள்களுக்கு ராக்கெட் விடும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்துள்ள நிலையில் அதற்காக பல கோடி ரூபாய்களை மத்திய அரசு செலவு செய்து வருகிறது. ஆனால் இந்தியாவில் மனித கழிவுகளை மனிதனே அள்ளுகின்ற பணிகளுக்கு இது வரை மாற்று வழிகளை கண்டுபிடிக்காமலும், அதற்கான முயற்சியை முன்னெடுக்காமல் இருப்பதும், விஞ்ஞானம் அசுர வளர்ச்சியடைந்துள்ள நிலையிலும் பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களையே பயன்படுத்தி வருவதும் மத்திய, மாநில அரசுகளின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.

மேலும் மனித கழிவுகளை அள்ள, கழிவுநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த, பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்வது போன்ற பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்கான சட்டம் நடைமுறையில் இருந்தும் தொடர்ந்து துப்புரவு பணியாளர்களை அப்பணியில் ஈடுபடுத்துவதும், விஷவாயு தாக்கி தொடரும் மரணங்களை மத்திய, மாநில அரசுகள் கண்டும் காணாமல் இருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் மனித கழிவுகளை மனிதனே அள்ள 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்ததில் இருந்து இது வரை இந்தியா முழுவதும் சுமார் 1500பேருக்கு மேல் விஷவாயு தாக்கி மரணமடைந்துள்ளதாகவும், அதில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், அப்பணியில் ஈடுபட்டு மரணமடைந்த தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை என்கிற புள்ளி விபரம் கடும் அதிர்ச்சியை தருகிறது.

எனவே தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜூலை – 2ம் தேதியும், சென்னை, பட்டினப்பாக்கத்தில் நேற்று முன்தினமும் (15.07.2020) கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 20லட்சம் ரூபாய் இழப்பீடும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிடுவதோடு, கழிவுநீர் தொட்டிகளிலும், பாதாள சாக்கடையிலும் மனிதர்களை பணி செய்ய அனுமதித்தால் தொழிலாளர்களை விஷவாயு தாக்கும் என்பதை தெரிந்தே அனுமதிக்கும் அதிகாரிகள் மீதும், சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மேலும் உச்சநீதிமன்ற உத்தரவை கடை பிடிக்காத மாநில அரசுகள் மீதும், அதிகாரிகள் மீதும் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்வதோடு பாதாள சாக்கடை, கழிவுநீர் தொட்டி போன்றவற்றில் உள்ளே இறங்கி பணி செய்திட, மனித கழிவுகளை அள்ள மனிதர்கள் பயன்படுத்தப்படுவதை உடனடியாக தடுக்கவும், அதனை தீவிரமாக கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்திடவும், அப்பணியை செய்ய மனிதர்களுக்குப் பதில் மாற்று வழிகளை கண்டறிந்து செயல்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திடவும் மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இனி வருங்காலங்களில் கழிவுநீர் தொட்டிகளிலும், பாதாள சாக்கடையிலும் பணி செய்து விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் மரணமடையும் நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.”\

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது,


Share this News:

Leave a Reply