தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் – கலக்கத்தில் பெரிய தலைகள்!

Share this News:

சென்னை (01 டிச 2022): சமீபத்திய நிகழ்வுகளால் தமிழக பாஜகவில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் திருச்சி சூர்யா சிவா, சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரணுடன் பேசிய போன் உரையால் ஆடியோ கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. டெய்சியை ஆபாசமான வார்த்தைகளால் அர்ச்சித்த சூர்யா, பதவிக்கு வந்தது எப்படி என கேசவ விநாயகத்தையும் தொடர்பு படுத்தி ஆபாசமாகப் பேசினார். இதனைத் தொடர்ந்து, அரசியல் அரங்கில் பாஜகவில் கேசவ விநாயகன் செலுத்தும் ஆதிக்கம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் கடந்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் சங் பரிவார் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் வழிகாட்டுதலில் இயங்கும் 30க்கும் அதிகமான சங் பரிவார் அமைப்புகள் ஆண்டுக்கு ஒருமுறை கூடி செயல் திட்டங்களை வகுப்பது வழக்கம். இது ‘சமன்வய பைட்டக்’ என அழைக்கப்படும். இந்தக் கூட்டத்தில் பாஜக உள்ளிட்ட ஒவ்வொரு அமைப்பும் கடந்த ஓராண்டில் செய்த பணிகளை ஆய்வு செய்து, அடுத்த ஓராண்டிற்கான செயல் திட்டங்கள் உருவாக்கப்படும்.

பள்ளிகளில் மத அடிப்படைவாத நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவையும் நடந்த இந்த ஆர்.எஸ்.எஸ் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணிச் செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழக அரசு தடை விதித்தது, பொது இடங்களில் கூட்டங்களை நடத்த விடாமல் அளிக்கப்படும் நெருக்கடிகள், அரசுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாஜகவில் நிலவி வரும் உட்கட்சி மோதல்கள், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்களால் கட்சிக்குள் நிலவி வரும் குழப்பங்கள் பற்றியும், 2024ல் நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய இணை பொதுச் செயலாளர் மன்மோகன் வைத்யா, தமிழ்நாட்டில் பாஜக வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுப்பது பற்றிப் பேசியுள்ளார். கணிசமான இடங்களை அரசியல் ரீதியாக நாம் பிடித்து விட்டால், ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளை வளர்ப்பது எளிதாகிவிடும், கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வளர்ச்சிக்கு அங்கு பாஜக வெற்றி பெற்றதே காரணம் எனப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

கட்சி ஒருபக்கம் மக்கள் மத்தியில் பேசுபொருளாகி வரும் நிலையில், மறுபக்கம் கட்சிக்குள்ளேயே தலைவர்களுக்கு இடையேயான மோதலால் மாற்றி மாற்றி குழிபறிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவது மோசமான பழக்கம். கட்சியில் தனி மனிதர் மீது புகார் என்றாலும் கட்சிக்குத்தான் களங்கம் என பாஜக நிர்வாகிகளை எச்சரித்துள்ளார். அண்ணாமலை – கேசவ விநாயகன் பனிப்போரை சுட்டிக்காட்டியே அவர் இவ்வாறு பேசியதாகக் கூறப்படுகிறது.

மேலும் கேசவ விநாயகன் பெயர், சமூக வலைதளங்களில் கடுமையான சர்ச்சைக்கு உள்ளான நிலையில், அவரை மாற்றிவிட்டு வேறொரு ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை கொண்டு வரவும் பாஜக தேசிய தலைமைக்கு ஆர்.எஸ்.எஸ் பரிந்துரை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.


Share this News:

Leave a Reply