சென்னை (06 டிச 2022): சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து தாம் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா. தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் அவருக்கு மாநில ஓபிசி பிரிவு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
அண்மையில் பாஜக நிர்வாகி டெய்சியை செல்போனில் ஆபாசமாக சூர்யா திட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாஜக பொறுப்பில் இருந்து திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். இந்த நிலையில் பாஜகவிலிருந்து விலகுவதாகவும் அண்ணாமலைக்கு நன்றி என்றும் ட்விட்டரில் திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.
அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் . pic.twitter.com/vbBMhGwzFl
— Trichy Suriya Shiva (@TrichySuriyaBJP) December 6, 2022
அத்துடன் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திருச்சி சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.