உதயநிதியின் பரபரப்பு கடிதம்!

Share this News:

சென்னை (23 ஜூன் 2021): நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவுக்கு உதயநிதி மற்றும் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்த கடிதத்தில், “நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ள குழுவின் தலைவர் மாண்புமிகு நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களுக்கும் குழுவினருக்கும் எங்களின் அன்பு வாழ்த்துகள். இந்தக்குழு தமிழ்நாட்டின் பெற்றோர், மாணவர், ஆசிரியர், அறிவுசார் குழுக்கள் என அனைத்து தரப்பு மக்களின் பரிந்துரைகளை, எண்ணங்களைப் பெற்று வருவதில் தி.மு.கழக இளைஞர் அணியும் – மாணவர் அணியும் பெருமகிழ்ச்சி கொள்கின்றன.

‘நீட் தேர்வின் பாதிப்பு பற்றி இதுவரை 25 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் நீட் தேர்வு வேண்டாம் என்றே கருத்து தெரிவித்துள்ளதாகவும் மாண்புமிகு நீதியரசர் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தீர்கள்.இந்த பெரும்பான்மையானோரின் மனநிலையை அறிந்தவராக இருந்ததால்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முந்தைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்தார், உச்ச நீதிமன்றம் வரை சென்று தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றார்.ஆனால் அதற்கு பிந்தைய ஆட்சியாளர்களின் காலத்தில் நீட் தேர்வு திணிக்கப்பட்டது. ஆனாலும் அது முதலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய தலைவர் அவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் குறிப்பாகத் தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரியும் போராடி வருகிறார்.

எங்கள் கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல் படி தி.மு.கழக இளைஞரணியும் – மாணவரணியும் இணைந்து சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிப் பல போராட்டங்களை நடத்தியுள்ளோம்.இளைஞர் அணி – மாணவர் அணி சார்பில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பெரும்பான்மையான நிகழ்ச்சிகளில், கூட்டங்களில் நீட் கூடாது என்பதை வலியுறுத்தும் தீர்மானங்களை முன்வரிசையில் நிறைவேற்றியிருந்தோம்.முக்கியமாகக் கடந்த 2020 செப்டம்பர் 8 அன்று இளைஞர் அணி, மாணவர் அணி இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தினோம்.

சென்னையில் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில் கழக இளைஞரணி செயலாளர் – மாணவரணிச் செயலாளர் என்ற முறையில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டோம். மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் இரு அணிகளின் நிர்வாகிகளும் உறுப்பினர்களும் பெருமளவில் பங்கேற்று நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய-மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்ததுடன் அதன் அவசியம் குறித்து பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வகையில் துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். தமிழகத்தில் அனிதாவில் தொடங்கி பிரதீபா, ஏஞ்சலின் ஸ்ருதி, சுபஸ்ரீ (சென்னை), ரிதுஸ்ரீ, ஜோதிஸ்ரீ துர்கா, வைஸ்யா, ஆதித்யா, விக்னேஷ், சுபஸ்ரீ (திருச்சி), மோதிலால், கீர்த்தனா, தனலெட்சுமி ஆகிய 13 மாணவர்கள் நீட் தேர்வால் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.அப்படி தற்கொலை செய்து கொண்ட ஒவ்வொருவர் வீடுகளுக்கும் நாங்கள் நேரில் சென்று நீட் தேர்வால் பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிதியுதவி அளித்தோம்.

பிள்ளைகளை இழந்த அத்தனை பெற்றோரும், ‘நீட் தேர்வு அரசுப்பள்ளி பாடத்திட்டத்துக்கு எதிராக உள்ளதால், பள்ளி தேர்வுகளில் நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாலும், நீட் தேர்வின் வினாத்தாள்கள் மாணவர்களுக்குப் பயத்தையும், எதிர்மறை சிந்தனையையும் விதைத்து அவர்களைத் தற்கொலை வரை அழைத்துச் செல்கின்றன. எனவே, நீட் வேண்டாம்’ என்று எங்களிடம் கண்ணீர் மல்க வேண்டிக் கேட்டுக்கொண்டனர். பன்னிரண்டு ஆண்டுகள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்துத் தேர்ச்சி அடையும் மாணவரின் முயற்சியை, முற்றாகப் புறந்தள்ளுவதாகத் தான் நீட் தேர்வின் அடிப்படையே அமைந்திருக்கிறது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவராயினும், நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகள் இன்றி நீட் தேர்வில் தேறுவது கடினம் என்ற நிலை தான் உண்மையானது.

பன்னிரண்டாம் வகுப்பில் பெறும் மதிப்பெண்ணை விட, நீட் தேர்வின் மூலம் என்ன விதமான தகுதியும் திறமையும் சோதிக்கப்படுகின்றது என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் இல்லை. நீட் தேர்வுக்குத் தயாரித்தல் என்பது, முறையான பள்ளி சார்ந்த கல்வி முறையை மாற்றி, அதற்கு மாற்றாக நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்கள் சார்ந்ததாகக் கல்வியை மாற்றிடவே உதவும். இதன் மூலம் கற்றல் என்பது அறிவை வளர்த்துக் கொள்வதற்கானதாக அல்லாமல், முற்றிலும் ‘நீட் தேர்வை வெல்வது எப்படி?’ என்னும் அடிப்படையிலேயே அமையும். இதனால் புரிந்து கற்றல் என்னும் முறை ஒழிக்கப்பட்டு, அறிவு வளர்ச்சி தடைப்படும் ஆபத்தே நிறைந்துள்ளது.

மேலும், ஒரு பாடத்தைப் படிக்கா விட்டாலும் கூட நீட் தேர்வில் தேர்ச்சியடைய முடியும். நீட் தேர்வு முறையின் படி இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில் ஏதேனும் ஒன்றைத் தவிர்த்துப் பிற பாடங்களில் கவனம் செலுத்திக் கூட, முக்கால் பங்கு மதிப்பெண்களைப் பெற முடியும்.அதாவது அடிப்படைப் பாடங்களில் ஒன்றைப் படிக்காமலே கூட நீட் தேர்வில் வெற்றிபெற முடியும். இது மருத்துவக் கல்விக்கான அடிப்படைப் பாடங்களை அறியாமலேயே மருத்துவக் கல்லூரிக்குள் நுழைய வாய்ப்புத் தருவதாகும்.

தமிழ்நாட்டின் மருத்துவக் கல்வியே தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புக்கு அடிப்படையாகும். எளிய மக்களுக்கு மருத்துவக் கல்வியை வழங்கி, அவர்கள் மூலமே எளிய மக்களுக்கும், மிகவும் பின்தங்கிய நிலப்பகுதிகளுக்கும் மருத்துவத்தைக் கொண்டு சேர்த்துள்ளது தமிழ்நாடு அரசு. இளநிலை மருத்துவப் படிப்பு மட்டுமல்லாமல், முதுநிலை மருத்துவப் படிப்பு, உயர் மருத்துவப் பிரிவுகள் உள்பட தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளும், அரசு மருத்துவத் துறையும் பின்னிப் பிணைந்து வெற்றிகரமான சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதை நீட் தேர்வு சீர்குலைக்கிறது. இது தமிழ்நாட்டு மக்களின் நலனுக்குப் பெருங்கேடாய் முடியும் ஆபத்து உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ்நாட்டின் முதுநிலை மற்றும் உயர் மருத்துவப் பிரிவுகளில் 50% இடங்களையும் இளநிலையில் 15% இடங்களையும் வலுக்கட்டாயமாக ஒன்றிய அரசு பறித்துக் கொண்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அரசு மருத்தவக் கல்லூரிகள் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து அரசு மருத்தவக் கல்லூரிகளிலும் முதுநிலை மற்றும் உயர் மருத்தவப் பிரிவுகள் அதிகளவில் உள்ளன. இவ்விடங்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்கள் வாய்ப்பை இழக்கும் சூழலில், எஞ்சிய இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்துவதையும் ஒன்றிய அரசின் கைகளில் தருவதன் மூலம் தமிழ்நாட்டின் மருத்துவத் துறை பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் அபாயமும் உள்ளது.2019 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத்தேர்தல் பிரச்சாரங்களின்போது கழகத் தலைவர் அவர்களும், இளைஞரணி செயலாளரான நானும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, பெற்றோர், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் நீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை தன்னெழுச்சியாக பதிவு செய்ததையும் இங்குக் குறிப்பிட விரும்புகிறோம்.

சமூக நீதிக்குப் புறம்பான, ஏற்றத்தாழ்வைத் திணிக்கும், நீட் தேர்வு இந்திய ஒன்றியத்தின் அரசியலமைப்புக்கு எதிரானது. ஏழை – எளிய – கிராமத்து மாணவ – மாணவிகளின் கனவுகளுக்கு மட்டுமன்றி அவர்களின் உயிருக்கே ஆபத்தானது. நீட் நுழைவுத்தேர்வு என்பது ஏற்றத்தாழ்வின் உச்சம், மாணவர்களின் மருத்துவக்கனவை சுக்கு நூறாக்கும் கொடுங்கோலான செயல், தேர்வு என்கிற பெயரில் திணிக்கப்படும் கொலைக்களம் ஆகும். எனவே, இத்தகைய ஆபத்து நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தமிழ் நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தங்களுடைய பரிந்துரையை அளிக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நீட் தேர்வு மூலமாகத்தான் இனி மருத்துக் கல்வி என்று பிடிவாதமாக இருக்கும் ஒன்றிய அரசு, தான் நடத்தும் மத்திய கல்வி நிலையங்களில் மருத்துவ படிப்பில் சேருவதற்கு நீட் தேர்வு தேவையில்லை என்று விலக்கு அளித்துள்ளது. இது ஒன்றிய அரசினுடைய பாரபட்சமான இரட்டை நிலையைக் காட்டுகிறது. மேலும் மாநில அரசினுடைய கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்துள்ளது.ஒன்றிய அரசு தன் ஆளுகைக்கு உட்பட்ட கல்வி நிலையங்களில் நீட் தேர்வு தேவையில்லை என்று விலக்களித்து உள்ளதுபோல் ஏற்கெனவே தமிழ்நாட்டிலும் நீட் தேர்வுக்கு விலக்களித்து முன்னர் இருந்த முறைப்படி பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்விக்கான சேர்க்கை நடைபெறவேண்டும் என்று மாண்புமிகு நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் அமைந்துள்ள இக்குழு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply