அதி வேகமாக பரவும் டெல்டா பிளஸ் வைரஸ் – என்ன செய்ய வேண்டும்? : WHO விளக்கம்

Share this News:

ஜெனிவா (28 ஜூன் 2021): இந்தியாவில் ஏற்கனவே உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் உருமாற்றம் அடைந்து டெல்டா பிளஸ் வைரஸாக உருவெடுத்தது.

இந்த டெல்டா வகை வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்டா வகை வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது. மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ராஸ் ஆதநோம் கெப்ரேயசுஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறியதாவது:-

டெல்டா வகை கொரோனா 85 நாடுகளில் பரவி உள்ளது. இதுவரை மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா வகை உருமாறிய கொரோனாதான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.

இது பற்றிய கவலை உலகம் முழுவதும் நிலவுகிறது. தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களிடம் வைரஸ் வேகமாக பரவுகிறது. அதே போல் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாடுகளிலும் சமூக கட்டுப்பாடுகள் குறைவாக உள்ள நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவப் பரவ அது புதிய வகையை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அது வைரசின் இயல்பாகும்.

பரவலைத் தடுப்பது மட்டுமே புதிய வகையை உருவாக்குவதை தடுக்கும். இதற்கு தடுப்பூசி போட்டுக் கொள்வது தான் தீர்வு.

அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி மருந்து செலுத்திக் கொள்ள தாமதம் செய்வதும் கூட வைரசின் வேகமான வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது என டெட்ராஸ் ஆதநோம் கூறினார்.

டெல்டா வகை கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டும் போதாது. தடுப்பூசி போட்டவர்களும் முகக்கவசம் அணிவது அவசியம் என்கிறார்.

மேலும், முழுமையாக இரண்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டாலும், குறிப்பிட்ட காலத்துக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் மீண்டும் தேசிய அளவிலான ஊரடங்குகள் தேவைப்படும் என்றார்.


Share this News:

Leave a Reply