எர்துருல் – அசத்தும் வரலாற்று தொலைகாட்சி தொடர்!

Share this News:

13 ஆம் நூற்றாண்டில் உருவாகி முதல் உலகப்போர் முடிந்த காலகட்டமான 1924 ல் முடிவுக்கு வந்த உஸ்மானிய பேரரசு, இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான இடம் வகிக்கிறது. இஸ்லாத்தின் நாயகர் முகம்மது நபி, 623 ஆம் ஆண்டுகளில் உருவாக்கிய இஸ்லாமிய கிலாஃபத் பேரரசின் தொடர்ச்சி, 1924 வரை நீடித்ததாக இஸ்லாமிய உலகம் நம்புகிறது.

ஆங்கிலேயர்களால் ஒட்டாமன் எம்பைர் என்றழைக்கப்பட்ட இந்த உஸ்மானிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இஸ்லாமியர்களின் உலகத் தலைமை இல்லாமல் ஆன நிலையில், அதனை மறு உருவாக்கம் செய்வதற்கான ஆவலும் முயற்சியும் 1924-ஆம் ஆண்டு கால கட்டத்திலிருந்தே தொடர்ந்து நடந்தும் வருகின்றன. இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் போது, கிலாஃபத் இயக்கம் என்று இந்திய முஸ்லிம்கள் தோற்றுவித்ததும் அதனை மகாத்மா காந்தியடிகளே முன்னின்று தொடங்கி வைத்ததும் வரலாற்றின் முக்கிய தருணங்கள்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த உஸ்மானிய பேரரசு உருவாகக் காரணமாக இருந்தவரின் வரலாற்றைப் பேசுவதுதான் இந்த எர்துருல் வரலாற்றுத் தொலைகாட்சி தொடர். மட்டுமல்ல, இன்று உலகில் மிக முக்கியப் பேசுபொருளாகியுள்ள இஸ்தான்புலின் ஹாகியா சோபியா தேவாலயம்-பள்ளிவாசல்-மியூசியம்-பள்ளிவாசல், 1453 ல் கான்ஸ்டான்டி நோபிள் அரசிடமிருந்து கைப்பற்றப்பட்டதும் இந்த உஸ்மானிய பேரரசால்தான்.

ஆபிரகாமிய மதங்களான யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களின் புண்ணியத்தலமாக விளங்கும் ஜெரூசலேமை, ஐரோப்பிய சிலுவைப்படையினரிடமிருந்து கைப்பற்றிய சலாஹுத்தீன் அய்யூபிக்குப் பின்னர், 1225 கால கட்டத்திலிருந்து இந்தத் தொடர் பேச ஆரம்பிக்கிறது.

ஒரு பக்கம் மேற்கிலிருந்து சிலுவைப்படையினரும் திருச்சபை காப்பு ஊழியர்களும் (டெம்ப்ளர்கள்) சேர்ந்து ஜெரூசலேமைத் திரும்பக் கைப்பற்றுவதற்காக முஸ்லிம் உலகிற்குள் நடத்தும் கீழறுப்புச் சதிகள்; தொடர் தாக்குதல்கள். மறுபக்கம், கிழக்கிலிருந்து செங்கிஸ்கானின் மங்கோலியப் படையினரின் காட்டுமிராண்டித்தனம். இந்த இரண்டுக்கும் இடையே சிக்கித் தவிக்கும் இஸ்லாமிய உலகைக் காப்பதற்காக, தம் மக்களுக்குக் குடியிருக்க நிரந்தரமானதொரு இருப்பிடம்கூட இல்லாமல் அலையும் ஒரு சாதாரண நாடோடி கோத்திரத் தலைவனின் மகனான எர்துருல் நடத்தும் போராட்டம்தான் இத்தொடர்.

ஆசியா மைனர் என்றழைக்கப்படும் இன்றைய துருக்கி பகுதி வரலாற்றில் அன்றும் இன்றும் மிக முக்கியமான பகுதி. இது, மேற்கையும் கிழக்கையும் ஒருங்கிணைப்பது மட்டுமின்றி, இரு திசைகளிலுள்ளவர்களுக்கிடையிலான வர்த்தகத்தின் முக்கியமான பாதையாகவும் உள்ளது. இதனைக் கையகப்படுத்த எப்போதுமே மேற்கும் கிழக்கும் உள்ளறுப்பு சதிகளைச் செய்துள்ளன. சமீபத்தில்கூட, எர்தோகனின் ஆட்சியை வஞ்சகமாக கைப்பற்ற இராணுவ சதி நடவடிக்கை நடந்து, அதனை அவர் வெற்றிகரமாக முறியடித்தார். இந்தச் சதியின் தொடக்கம் 1200 களிலேயே இருப்பதை இத்தொடர் முழுக்கக் காண முடியும்.

மாமியார், மருமகள் பிரச்னையும் கள்ளக்காதல் விஷயங்களிலும் மட்டுமே சுற்றிவரும் தமிழ் தொலைகாட்சி தொடர் உலகுக்கு இத்தொடர் மாபெரும் அற்புதமாக காட்சியளிக்கும். வெறுமனே ஒரு தொலைகாட்சி தொடர் என்று கடந்து விடும் நிலையில் இல்லாமல், இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் வரலாற்று ஆவணமிது. ஹாலிவுட்டே அதிசயிக்கும் அளவுக்கான காட்சிப்படுத்தல்கள் அற்புதம். அதில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுமே, அப்படியே வாழ்ந்து காட்டியுள்ளனர். வரலாறு என்றாலே கசப்பு மருந்தான நமக்கெல்லாம், வரலாற்றை இப்படியும் சிலிர்க்க வைக்கும் வகையில் காட்சிப்படுத்த முடியுமா என வாய் பிளக்க வைத்துள்ளனர்.

நிம்பிள்கி, நம்மள் தரான் என தமிழையே ஒழுங்காக உச்சரிக்கத் தெரியாதவராகவோ, பச்சை கலரில் ஆடையுடுத்தி, தலைப்பாகை நீண்ட தாடியுடன் புகை போட்டுக் கொண்டு ஒவ்வொரு கடையாக ஏறி இறங்குபவராகவோ அல்லது கழுத்தில் ஒரு தாயத்தைக் கட்டிக் கொண்டு வருபவராகவோ மட்டுமே முஸ்லிம்களைக் காட்டுவதுதான் ஒருகாலத்தில் தமிழ் சினிமா உலகம் கடைபிடித்த ஒழுங்கு. சமீபகாலத்தில் இதில் சில மாற்றங்கள் வந்திருந்தாலும், நிஜமாகவே ஒரு முஸ்லிமின் வாழ்வு எப்படியிருக்கும்; அவனுடைய வியாபார முறை எப்படியிருக்கும்; அவனுடைய குடும்ப வாழ்க்கை எப்படியிருக்கும்; தினசரி வாழ்க்கையில் அவன் கடைபிடித்தொழுகும் பண்புகள் என்ன என்ற ரீதியிலான முஸ்லிம்களின் வாழ்க்கை முறையினைத் தமிழ் காட்சி உலகில் முறையாக எங்கும் காட்சிபடுத்தியிருப்பதாகத் தெரியவில்லை. இத்தொடர் முழுக்க அதனைக் கண்டு ரசிக்கலாம். முஸ்லிம்களின் வாழ்க்கை முறை இப்படியானது என்பதை முஸ்லிமல்லாதவர்கள் என்றில்லை, தமிழ் முஸ்லிம்களும்தான் அறிய வேண்டியுள்ளது. ஐவேளை பள்ளிவாசலுக்குப் போவதும் நீண்ட தாடியும் தொப்பியும் அணிவது மட்டுமல்ல இஸ்லாம்; அது, முழு வாழ்விலும் எதிரொலிக்க வேண்டிய சகோதரத்துவ ஒழுங்கு என்பதை அழகாக காட்சிப்படுத்தியுள்ளனர்.

ஜனநாயக அரசாக இருக்கட்டும், முதலாளித்துவ அரசாக இருக்கட்டும், சோஷலிச அரசாக இருக்கட்டும், மன்னராட்சியாக இருக்கட்டும்… எந்த ஆட்சியாக இருந்தாலும் அதனை ஆட்டுவிப்பது கார்ப்பரேட்டுகள்தாம். இன்றுதான் இப்படி என நினைப்பவர்களுக்கு, வியாபாரத்துக்கும் அரசுக்கும் இடையிலான தொடர்பென்பது எக்காலத்தும் ஒன்றுபோல்தான் என்ற வெளிச்சத்தை இத்தொடர் தரும்.

பெண்ணுக்கும் மண்ணுக்காகவும்தான் யுத்தங்கள் என்றே படித்திருப்போம். ஆனால், அதனை அப்படி சாதாரணமாக சொல்லிக் கடந்துவிட முடியாது. இருப்பதற்குச் சொந்த நிலமில்லா மக்களைப் பொருத்தவரை, ஒரு பிடி நிலம் என்பது அவ்வளவு உணர்வுபூர்வமானது. தமக்கான தாய்மண்ணாக ஒன்றை உருவாக்கவும் அதனைத் தொடர்ந்து தக்கவைக்கவுமான போராட்டங்கள்தாம் தொடக்க மற்றும், மத்தியக்கால மக்களிடையே நடந்துள்ளது. இன்றைய சூப்பர்மார்க்கட்களையும் மால்களையும் ஆன்லைன் ஸ்டோர்களையும் கூடுதலாக அரசையே ஆட்டுவிக்கும் வால்மார்ட், அம்பானி மார்ட்களையும் பார்த்துள்ள நமக்கு, நிஜமாகவே சந்தைகள் எப்படி உருவாகின; அதன் முக்கியத்துவம் என்ன, ஏன் வியாபாரத்தையும் வியாபாரிகளையும் அரசுகள் முக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கின்றன, மத்திய காலக்கட்டத்தில் வியாபாரப் பாதைகள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றவையாக இருந்தன, அதனைப் பாதுகாப்பதற்கான அவசியம் என்ன என இப்படி ஏராளம் வியாபாரம் தொடர்பான விசயங்களைத் தெளிவாக இத்தொடர் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

1500 காலகட்டத்தில் இந்தியாவுக்கு வந்த வாஸ்கோடகாமா ஒரு வியாபாரி. அந்த வியாபாரிக்குப் பக்கபலமாக இருந்தது இராணுவத் தளபதி இராபர்ட் க்ளைவ். அவர்களை அனுப்பி வைத்தது, வியாபாரக் கிழக்கிந்திய கம்பெனி. ஒரு காலகட்டம் வரை இந்த வியாபார நிறுவனம்தான் இந்தியாவைக் கைக்குள் வைத்திருந்தது. அதற்கும் முன்னர் இந்தியாவைக் கண்டுபிடிக்க ஐரோப்பியர்களால் அனுப்பி வைக்கப்பட்ட மார்க்கோபோலோ அமெரிக்காவைக் கண்டுபிடித்தார். இவர்களெல்லாம் ஏன் கடல் மார்க்கமாக இந்தியாவைத் தேடி அலைந்தனர்? வியாபாரம்! இந்தியாவின் கனிமவளம்; செல்வச் செழிப்பு. அதனோடு நேரடித் தொடர்பை வைத்திருந்தவர்கள் அரபு வணிகர்கள். ஐரோப்பியருக்கு அவர்களின் கிழக்குப் பக்கமுள்ள இந்தியாவை அடைய, எகிப்தின் கைவசமுள்ள சூசஸ் கால்வாய் வழியாக வர வேண்டும்; அல்லது ஆசியா மைனர் என்ற துருக்கி வழியாக வர வேண்டும். இரண்டுமே இஸ்லாமிய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காலக்கட்டம் அது. அவர்களைமீறி அவ்வழியாக வரமுடியாததால்தான், கடலைச் சுற்றிக் கொண்டிருந்தனர். அவ்வளவு முக்கியத்துவம் வியாபாரத்துக்கும் இந்தத் துருக்கி பகுதிக்கும் உள்ளது. இத்தொடர் நடக்கும் காலகட்டம், கான்ஸ்டான்டி நோபிளின் கைவசம் இப்பகுதி இருந்த காலகட்டம். கிழக்கிலிருந்தான மங்கோலியரின் காட்டுமிராண்டி அட்டூழியத்தைத் தாக்குப்பிடித்து, மேற்கின் கையிலிருந்த அந்த வியாபாரப் பாதையினை ஒரு சிறு நாடோடி கூட்டத்திலுள்ளவன் எப்படி கைப்பற்றியிருக்க முடியும்? அவ்வளவு இரத்தம், துரோகம், கழுத்தறுப்பு, மரணம்.

இன்றைய துருக்கியின் தந்தையான அந்த நாயகன் எர்துருலின் வரலாறு,

வெறுமனே ஒரு முஸ்லிம் தலைவனின் வரலாறாக கடந்து செல்ல முடியாது. அதில், மொத்தமும் முஸ்லிம்களின் வாழ்வியல் அடங்கியுள்ளது. மேற்கின் சதி அடங்கியுள்ளது; கிழக்கின் கொடூரம் அடங்கியுள்ளது. ஒரு மனிதன் தம் வாழ்வை நீதி, சுதந்திரம் என்பதற்காக மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும்; வாழ்வின் எவ்வளவு இக்கட்டான சந்தர்ப்பம் வந்தாலும் அதிலிருந்து இம்மி அளவும் மாறிவிடக்கூடாது; அப்படியாக வாழும் மனிதன் வெற்றி வீரனாக மாறுவது மட்டுமல்லாது, வரலாற்றிலும் நிலைத்திருப்பான் என்பதன் வாழ்வியல் உதாரணங்களில் ஒன்றுதான் எர்துருல்.

இத்தொடரைக் காண்பவர்களுக்கு இறுதியாக ஒன்று குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

நம்பிக்கை. அது இறை நம்பிக்கையோ, தீய சக்தியின் மீதான நம்பிக்கையோ… ஒருவன் எதன் மீது நம்பிக்கை வைக்கிறானோ அதாக ஆகிறான்; அதனை அடைகிறான். ஒரு வீரனையோ, தலைவனையோ உருவாக்க இந்த நம்பிக்கை என்பது வரலாற்றில் எல்லாக் காலத்தும் முக்கியமான பங்கு வகித்துள்ளது. இங்கும் அதில் விதிவிலக்கைக் காணமுடியவில்லை. மேற்கிலிருந்து ஜெரூசலேமைக் கைப்பற்ற சதி செய்யும் சிலுவைப்படை மற்றும் டெம்ப்ளர்களுக்கு இயேசுவின் மீது நம்பிக்கை; அனடோலியா என்ற ஆசியா மைனரை அடக்கி, ஐரோப்பாவைக் காலடிக்குள் கொண்டு வந்து உலகையே தம் கட்டுப்பாட்டில் எடுக்க நினைக்கும் மங்கோலிய தளபதிக்குத் தீய ஆவிகள்மீது நம்பிக்கை; இரண்டுக்கும் இடையில் போராடும் எர்துருலுக்கு நீதி, சுதந்திரத்தின் மீதான இஸ்லாத்தின்மீது நம்பிக்கை. இம்மூன்று வகையினருமே, உலகில் தாம் அமைதியையே நாடுவதாகச் சொல்வது உச்சக்கட்ட வேடிக்கையும் ஆச்சரியமும். இன்றும் உலகில் அதுதான் நடக்கிறது. தீய சக்திக்கும் நல்ல சக்திக்கும் இடையிலான போராட்டம்; இரண்டு சக்தியுமே தாம் அமைதிக்காகவே போராடுவதாக கூறி படை திரட்டுகிறது. அமைதியை இரத்தம் சிந்தலின் மூலம் கொண்டு வரமுடியுமா? காந்தியையும் மண்டேலாவையும் மனத்தில் கொண்டுவந்து, பழிக்குப்பழி என்பதையும் நினைத்தால் இதற்கான பதிலை உலகம் அழிந்தாலும் கண்டுபிடிக்க முடியாது.

இந்த நம்பிக்கையாளர்களுக்கு மனிதச் சக்தியை மீறியதொரு சக்தி துணையாக இருப்பதாக நம்ப வைக்கப்படுவதும், அதில் எந்த அளவுக்கு ஒருவர் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறாரோ அவர், நீதி, மற்றும் சுதந்திரத்துக்காக தம்மையே அர்ப்பணிக்கத் தயாராகும் பட்சத்தில் அவருக்கே இறுதி வெற்றி என்பதுவுமே இந்த வரலாற்று ஆவணம் கற்றுத்தரும் மற்றொரு முக்கிய அம்சம்.

இஸ்லாத்தின் உள் விவகாரத்தோடு அணுகும்பட்சத்தில், நம்ப முடியாத சூஃபியிச அற்புதங்களும் கனவுகள் வழியான முன்னறிவிப்புகள் என்பவையெல்லாம் நிச்சயமாக தமிழ் முஸ்லிம் உலகம் விமர்சனக் கண்ணோட்டத்தோடே அணுகும். அந்த ஒரு விசயத்தை மட்டும் முஸ்லிம்களின் உள் கருத்தாடல்களுக்காக விட்டுக் கொடுத்துவிட்டுப் பார்த்தால், அனைவரும் சாதி, மதம், மொழி, இனம் கடந்து வியந்து ரசிக்கும் அருமையானதொரு படைப்பு எர்துருல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இதன் ஒவ்வொரு பகுதியின் கதைச் சுருக்கத்தோடும், தமிழ் சப் டைட்டில்களுடனும் அடுத்தடுத்தப் பதிவுகளில் காண்போம்!

– அபூ சுமையா.


Share this News: