சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுமா? – உச்ச நீதிமன்றத்தில் மனு!

Share this News:

புதுடெல்லி (12 ஜூன் 2020): சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்யக் கோரி, மாணவர்களின் பெற்றோர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பெற்றோர்கள் நேற்று வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையிலும், பாடங்களின் உள்மதிப்பீட்டு மதிப்பெண்களின் சராசரி அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதாக எய்ம்ஸ் தகவல்கள் தெரிவிக்கும் இந்த சூழலில், லட்சக்கணக்கான மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. மீதமுள்ள 12ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ கடந்த மாதம் 18ம் தேதி வெளியிட்ட உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டும். மேலும், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை தேர்வு நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Share this News: