லடாக் எல்லை பிரச்சனை குறித்து இந்தியா சீனா முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு!

புதுடெல்லி (06 ஜூன் 2020): லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

லடாக்கின் எல்லை பகுதியில் கடந்த மே 5 மற்றும் 6-ம் தேதிகளில் இந்திய ராணுவ படையினருக்கும் சீன ராணுவ படையினருக்கும் சிறிய அளவில் பிரச்னை ஏற்பட்டது. இதில் 150 வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து பிரச்னை தொடங்கிய இடமான பாங்காங் டிசோ ஏரியில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ள நகரி குன்சா விமான நிலையத்தை சீனா மீண்டும் கட்டமைத்து போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.

இதைப் போல இந்தியாவும் எல்லைப் பகுதியில் ராணுவத்தைக் குவித்துள்ளது. இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இரு நாடுகளிடையே ஏற்பட்ட போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு அதிகாரிகளும் முயற்சி மேற்கொண்டனர். இதில் தீர்வு ஏற்படவில்லை.

இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளின் ராணுவத்தைச் சேர்ந்த லெப்டி னன்ட் ஜெனரல்கள் இடையே பாங்காங் டிசோ பகுதியில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்தியாவில் இருந்து லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங், சீனாவில் இருந்து மேஜர் ஜெனரல் லி லின் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்திய தரப்பில் மேலும் 6 அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதைப் படிச்சீங்களா?:  போலி நெய் விற்கும் பாபா ராம்தேவ் - பாஜக எம்பி குற்றச்சாட்டு!

இன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது, மொத்தம் 5 முக்கியப் பிரச்சினைகள் குறித்து முதல் கட்டமாக பேச்சு நடத்தப்பட்டதாக தெரிகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள சீனப் பகுதிக்குட்பட்ட மோல்டா என்ற இடத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. இன்றைய பேச்சுவார்த்தையில் என்ன முடிவு எட்டப்பட்டது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, இரு நாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு இடையே, முக்கிய பேச்சுவார்த்தை நடந்தது. வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடந்த பேச்சு வார்த்தையின்போது, கிழக்கு ஆசியாவுக்கான இந்திய வெளியுறவு அமைச்சக இணைச் செயலர், நவீன் ஸ்ரீவத்சவா பங்கேற்றார். சீனா தரப்பில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சக தலைமை இயக்குனரான வூ ஜியாங் ஹோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.