ஊரடங்கு தொடரும் – பிரதமர் மோடி அதிரடி!

புதுடெல்லி (12 மே 2020): கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள முழு பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஊரடங்கு 4.0 முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதற்கான புதிய விதிமுறைகள் மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்தி மோடி நாட்டு மக்களுக்கு இன்றிரவு (மே 12) 8 மணியளவில் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையில், “20 லட்சம் கோடி: கொரோனா வைரசின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்புத் திட்டங்கள் விரைவில் அறிவிக்கப்படும். அனைவரையும் உள்ளடக்கியதாக இந்தத் திட்டங்கள் இருக்கும்.

இந்தத் திட்டங்களின் மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள் பயன்பெறுவர். தொழில்துறையின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 10 சதவீதம் கொரோனா மீட்புப் பணிகளுக்கு வழங்கப்படும்.

கொரோனா பாதிப்பை சமாளிக்க நமக்கு உள்நாட்டு உற்பத்தியே கைகொடுத்தது. கொரோனா வைரஸ் தடுப்புக்கு பயன்படுத்தப்படும் இந்திய மருந்துகள் உலக அளவில் நம்மை தலைநிமிர செய்துள்ளன.

கொரோனா வைரஸ் நோய்தொற்று ஏற்படுவதற்கு முன் நம்மிடம் தனிநபர் பாதுகாப்புக் கவசங்கள் (PPE) இல்லை. ஆனால் இன்று 2 லட்சம் PPE உடைகள் நம்மிடம் உள்ளன.

இதைப் படிச்சீங்களா?:  முஹம்மது ஜுபைர் கைதும் பின்னணியும்!

கொரோனா தடுப்புக்கான முகக்கவசம், PPE மற்றும் கொரோனா வைரஸ் நோய்தொற்று சிகிச்சைக்கான மருந்துகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு நாம் இந்த காலத்தில் வளர்ச்சியடைந்துள்ளோம்.

இதன் மூலம் உலகையே வழிநடத்துவதற்கான முக்கிய வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது இந்த வாய்ப்பை நாம் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இனிவரும் காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சிக்கே வித்திடும்.

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றியடைய, நாம் யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என்று 130 கோடி இந்தியர்களும் உறுதியேற்க வேண்டும். தனிநபர் ஒவ்வொருவரின் தன்னம்பிக்கை மட்டுமே இந்தப் போரில் வெல்லவதற்கான ஒரே வழி.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தற்போது நடைமுறையில் உள்ள முழு பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படவுள்ளது.

ஆனால், இந்த பொதுமுடக்கம் 4.0 முற்றிலும் மாறுப்ப்ட்டதாக இருக்கும். மாநில அரசுகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இதற்கான புதிய விதிமுறைகள் மே 18 ஆம் தேதிக்கு முன்பு அறிவிக்கப்படும். கொரோனாவை சுற்றியே நம் வாழ்க்கை இருக்க முடியாது என்பதால் விரைவில் நீட்டிக்கப்படவுள்ள முழு பொதுமுடக்கம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.”

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.