ஆவின் பால் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

Share this News:

சென்னை (14 ஜூலை 2020): “கொரோனா பேரிடரிலும் ஆவின் விற்பனை விலை உயர்வு சர்வாதிகார போக்காகும்.” என்று பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“கடந்த வாரம் ஆவின் நிறுவனம் சார்பில் 5வகையான பால் மற்றும் பால் பொருட்களை தமிழக முதல்வர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அதில் மோர், லஸ்ஸி மற்றும் 90நாட்கள் கெட்டுப் போகாத பால் ஏற்கனவே வணிக சந்தையில் விற்பனையில் உள்ளதென்றும், அதனை சிறு மாற்றங்களோடு புதிய பொருட்களாக சித்தரிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

மேலும் ஏற்கனவே கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (Premium கொழுப்பு சத்து 6.0% திடசத்து 9.0%) விற்பனையில் இருக்கும் போது தற்போது அதில் வெறும் 0.5%கொழுப்பு சத்தை கூடுதலாக்கி, பாக்கெட் வண்ணத்தை மாற்றி அதற்கு “டீ மேட் பால்” என பெயரிட்டு 1லிட்டருக்கு 9.00ரூபாய் கூடுதலாக விலை வைத்து 60.00ரூபாய் என நிர்ணயம் செய்திருப்பதையும் கண்டித்து “தனியார் பால் நிறுவனங்களைப் போல் தன்னிச்சையாக செயல்பட ஆவின் திட்டமிடுகிறதோ…?” என்கிற சந்தேகத்தையும் எங்களது சங்கத்தின் சார்பில் வெளிப்படுத்தியிருந்தோம். தற்போது எங்களது சந்தேகத்தை உறுதி செய்யும் விதமாக ஆவின் நிர்வாகம் தனது செயல்பாடுகளை துவக்கியுள்ளது.

அதன் முதற்கட்டமாக இன்று (14.07.2020) முதல் ஆவின் நெய் விற்பனை விலையை ஒரு லிட்டருக்கு 20.00ரூபாய் முதல் 50.00ரூபாய் வரையிலும், சமையல் வெண்ணை விற்பனை விலை ஒரு கிலோ 20.00ரூபாய் முதல் 30.00ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

அதிலும் நேற்று (13.07.2020) அதற்கான சுற்றறிக்கை வழங்கி விட்டு இன்று (14.07.2020) முதல் உடனடியாக அதன் விற்பனை விலை உயர்வை நடைமுறைப்படுத்துவது தனியார் பால் நிறுவனங்களை விட சர்வாதிகாரி போல் ஆவின் நிர்வாகம் நடந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது. இதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

ஏனெனில் கொரோனா பேரிடர் காலமான தற்போது நான்கு மாதங்களாக அமுலில் உள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டு, வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இப்படி ஒரு முடிவெடுக்க சர்வாதிகார எண்ணம் கொண்டவர்களால் மட்டுமே சாத்தியப்படும்.

மேலும் ஊரடங்கு காரணமாக தேனீர் கடைகள், உணவகங்கள், கேண்டீன்கள் எல்லாம் செயல்படாமல் இருக்கும் சூழலில், செயல்படும் சிலவற்றிலும் பார்சல் மட்டுமே அனுமதி என்கிற நிலை இருப்பதால் வணிக ரீதியிலான பால் விற்பனை என்பது முற்றிலும் குறைந்து போய் விட்டது. இந்நிலையில் தேனீர் கடைகள், உணவகங்கள் பெயரைச் சொல்லி “டீ மேட் பால்” என அறிமுகம் செய்து அதிலும் லிட்டருக்கு 9.00ரூபாய் உயர்த்தி நிர்ணயம் செய்து ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்க பார்க்கிறது ஆவின் நிர்வாகமும் அதற்கு அனுமதி அளித்த தமிழக அரசும்.

எனவே உயர்த்தப்பட்ட நெய் மற்றும் சமையல் வெண்ணை, டீ மேட் பால் போன்றவற்றின் விற்பனை விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.”
\
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Share this News: