பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் கட்டப்படும் முதல் இந்துக் கோவில்!

Share this News:

இஸ்லாமாபாத் (29 ஜூன் 2020): பாகிஸ்தான் தலைநகரம் இஸ்லாமாபாத்தில் முதல் இந்துக் கோவில் கட்டுமானப் பணிகள் 23.06.2020 அன்று தொடங்கியது. அங்குள்ள சிறுபான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவில் நிறுவுவதை இம்ரான்கான் அரசு நிறைவேற்றி உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் வளாகம் என பெயரிடப்பட்டுள்ள வளாகத்தில் ஒரு இடுகாடு, பார்வையாளர்கள் தங்குமிடம்,சமூகக் கூடம் மற்றும் வாகன நிறுத்தகமும் சுமார் 22 ஆயிரம் சதுர அடியில் H-9 பிரிவில் அமைய உள்ளது. இந்த நிலம் 2017இல் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் அரசால் அங்கீகரிக்கப் பட்டது. எனினும் பல்வேறு நிர்வாக காரணங்களால் கட்டுமானப் பணி தாமதமானது.

இஸ்லாமாபாத்தில் வசிக்கும் கட்டுமானத் தொழில் வல்லுநர் ப்ரீத்தம் தாஸ் கூறுகையில்”இது ஹிந்து சமுதாயம் மற்றும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாக அமையும்”என்றார். தாஸ் மேலும் கூறுகையில், பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள் குறிப்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்துக்கள் ஆளும் இம்ரான்கான் அரசின் ஆணையால் அமையப் பெற உள்ள கோவில் வளாகத்தால் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளதாக கூறினார்

மேலும் இம்முயற்சி தலைநகரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் இந்துக்களின் மக்கள் தொகைக்கு மிக அவசியமானது என்றும், இம் முயற்சியால் பாகிஸ்தான் அரசின் சமய நல்லிணக்கம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்படும் என்றும் கூறினார்.

பாகிஸ்தானில் 80 லட்சம் இந்துக்கள் வாழ்வதாக அந்நாட்டின் ஹிந்து ஒன்றியம் மதிப்பிடுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ எண்ணிக்கையாக 1998 கணக்கெடுப்பின்படி 30 லட்சம் இந்துக்கள் நாட்டில் உள்ளனர். அவற்றில் பெரும்பாலானவர்கள் தெற்கு சிந்து பிராந்தியம், இந்திய எல்லையை ஒட்டி வசிக்கின்றனர். மேலும் சமீபத்திய 2017 கணக்கெடுப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. இஸ்லாமாபாத்தில் 3000 இந்துக்கள் வசிப்பதாக சொல்லப்பட்டாலும், அதிகாரப்பூர்வ கணக்கு எதுவும் இல்லை.

மனித உரிமை பாராளுமன்ற செயலாளரும், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சி உறுப்பினருமான லால் சந்த் மாலி கூறுகையில்,”இஸ்லாமாபாத்தில் உள்ள ஹிந்துக்கள் கூடுவதற்கும்,வழிபடுவதற்கும் ஒரு சமுதாயக் கூடம் இல்லாதது மிகப்பெரிய குறையாகவும் ஏமாற்றமாகவும் இருந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தலைநகரத்தில் இந்துக்கள் பயன்படுத்தும் இடுகாடு இல்லாததால்,மக்கள் பிணங்களை பல நூறு மைல்கள் தாண்டி தங்கள் சொந்த ஊர்களுக்கும்,கிராமங்களுக்கும் எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளதாக தெரிவித்தார்.

மேலும்இப்புதிய கோவில் வளாகம் சிந்து பிராந்திய பகுதிகளிலிருந்து தலைநகருக்கு வரும் இந்து பார்வையாளர்களுக்கும் ஒரு கலாச்சார மையமாக திகழும். 1973 இல் இருந்து இஸ்லாமாபாத்தில் வசித்து வரும் தாஸ் மேலும் கூறுகையில் இஸ்லாமாபாத் தான் நாட்டிலேயே மிகவும் ஆடம்பரமான வாழ்வாதாரம் உள்ள ஊர் என தெரிவித்தார்.

இம்ரன் கான் அரசு கோவில் வளாக பணிகளுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை அன்று நடந்த சிறுபான்மை பிரிவு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் மத விவகாரங்கள் துறை அமைச்சர் நூர் அல் ஹக் கத்ரியிடம் கோவில் பணி நிதியை உடனே விடுவிக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிறுபான்மை பராளுமன்ற உறுப்பினர்கள் கூறும்பொழுது பிரதமர் இம்ரான் கான் அமைச்சர் கத்ரியிடம் கட்டாய மதமாற்றம் பற்றி இரண்டு மாதங்களுக்குள் மசோதா தாக்கல் செய்ய அறிவுறுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானில் உள்ள ஒற்றுமை மற்றும் அமைதி இயக்கம் தெரிவித்துள்ள கருத்துப்படி வருடத்திற்கு சுமார் ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள், முஸ்லிம் ஆண்களை திருமணம் செய்ய கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இம்ரான் கான் அரசு 2018 இல் பதவி ஏற்றதில் இருந்து, சிறுபான்மையினரை முன்னேற்று வதாகவும்,சிறுபான்மை வழிபாட்டு தலங்களை புனரமைக்கவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

மேலும் கடந்த நவம்பரில் பாகிஸ்தான் அரசு சீக்கிய புனித தளத்திற்கு செல்லும் வழித்தடத்தை திறந்தது. அங்குதான் சீக்கிய மத நிறுவனர் குருநானக் இறுதி நாட்களை கழித்தார்.
அவ் வழித்தடம் வழியாக சுமார் 5000 இந்திய யாத்திரிகர்கள் விசா இன்றி சீக்கிய கோவிலுக்கு வருவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது.சமீப காலமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராஜீய உறவு மோசமடைந்து வரும் நிலையில் இந்நடவடிக்கை இரு அரசுகளுக்கும் இடையில் சிறியளவிலான சுமுக நிலையை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் இன் தெற்காசிய தலைவர் உமர் வாரியாக், கோவில் வளாகம் அமைவதை வரவேற்ற போதிலும், இது போல் மேலும் சில நடவடிக்கைகள் வேண்டும் எனக் கூறினார். அவர் மேலும் கூறுகையில் சமூக விரோதிகளால் கோவில்கள் தாக்கப்படுவதையும், இந்துப் பெண்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதையும், மேலும் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான சட்டங்களையும் சரி செய்ய வேண்டும் எனக் கூறினார்.

இந்நேரத்துக்காக சபீர் அலீ


Share this News: